மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பூதாகரமானது. கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று குறிப்பிட்டு துரை வைகோ தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
அவரின் இந்த அறிவிப்பு மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. துரை வைகோ, ஒருவர் என குறிப்பிட்டது அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக கூறியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா கட்சிக்கு எதிராக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர் மீது ஏற்கனவே தற்காலிக ஒழுங்கு நடவடிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எடுத்திருந்தார். இதனையடுத்து மல்லை சத்யாவிடம் விளக்கம் கேட்டு 15 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான விளக்கத்தையும் மல்லை சத்யா, வைகோவுக்கு அனுப்பி இருந்தார்.
இருப்பினும் கட்சியில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்திருந்தார். இந்நிலையில் மல்லை சத்யா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அதன்படி ’திராவிட வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியின் பெயரை மல்லை சத்தியா அறிவித்துள்ளார். இந்த விழாவில் மதிமுகவில் இருந்து வெளியேறிய, வெளியேறப்பட்ட முக்கிய நிர்வாகிகளான அழகு சுந்தரம், நாஞ்சில் சம்பத், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Follow Us