Advertisment

750 ஆண்டு பழமையான கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன?; முனைவர் த.த.தவசிமுத்து தகவல்

kalv1

Dr. T.T. Thavasimuthu Informed What is the message of the 750-year-old Kulasekarapandian inscription?

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கோயிலில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம், சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயிலில் கல்வெட்டு இருப்பதாக அவ்வூர் சிவனடியார் இல்லங்குடி கொடுத்த தகவலின்பேரில், கல்வெட்டு ஆய்வாளர் ஆறுமுகனேரி முனைவர் த.த. தவசிமுத்து, அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார்.

Advertisment

இதுபற்றி முனைவர் த.த.தவசிமுத்து கூறியதாவது, “பாண்டிய நாட்டின் கிழக்கு கடற்கரையில் கொற்கை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய துறைமுகங்களுடன் இடைக்காலத்தில் குலசேகரப்பாண்டியன் பெயரால் வணிக நகரமாக இவ்வூர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறைமுகங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் பாண்டியர், சோழர், சேரர் இடையே  கடும் போட்டி நிலவியது. குலசேகரன்பட்டினம், மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் வணிகத் துறைமுகமாக இயங்கியதை இவ்வூர் கச்சிகொண்ட பாண்டீஸ்வரர் கோயில் கல்வெட்டு மூலம் அறியலாம். இவ்வூரில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகரப்பாண்டியன், உதயமார்த்தாண்டன் ஆகிய பாண்டிய, சேர மன்னர்கள் பெயரில் கச்சிகொண்ட பாண்டீசுவரர், குலசேகரவிண்ணவர் எம்பெருமான், உதயமார்த்தாண்ட விநாயகர் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் மத்திய தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisment

இவ்வூரில் பிற்காலப்பாண்டியர்களால் கட்டப்பட்ட மற்றொரு சிவன் கோயிலான சிதம்பரேஸ்வரர் கோயிலும் உள்ளது. இதன் கருவறை அதிட்டானப்பகுதியான ஜகதி, பட்டிகையில் இருந்த கல்வெட்டு இதுவரை பதிவு செய்யப்படாத கல்வெட்டு ஆகும். இதில் மூன்று வரிகள் தெளிவாக உள்ளன. அதன்பின்பு தெளிவற்று சிதைந்துள்ள இக்கல்வெட்டில் உள்ள வரிகள் மூலம் இது முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி.பி.1268-1318) கல்வெட்டு என அறியமுடிகிறது. இதில் மானவீர வளநாட்டு குலசேகரப்பட்டினம் என இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.

kalv2

உரிமை  கொண்டருளிய, நெல்லு நாழியும் கொள்வார்களாக, இந்தபடிக்கு அதிகம். இப்படி நாளது முதலுக்கு தானப் பிறமான, இந்த தானப் பிறமானம், இவ் ஊர்கள் திருவாதிரைப் போன்ற சொற்கள் மட்டுமே வாசிக்க முடியும் நிலையில் உள்ளன. இதன்மூலம் திருவாதிரை நாளில் இக்கோயிலுக்கு உரிய பூஜைகள் செய்ய மன்னர் குலசேகரப்பாண்டியன் நிலம் தானமாக வழங்கியிருக்கிறார் எனலாம். இந்த நிலத்தில் விளைந்த நெல்லும், நாழி அளவும் சொல்லப்படுகிறது. நன்செய் நிலங்களில் இருந்து வந்த நெல் உள்ளிட்ட விளை பொருட்கள் மூலம் கோயிலில் தினசரி பூஜைகளும், திருவிழாக்களும் என்றென்றும் நடத்திட வேண்டும் என முற்காலத்தில் கோயிலுக்கு தானப்பிறமானமாக நிலம் வழங்கியுள்ளனர். கல்வெட்டு எழுத்தமைதி கொண்டு இது 750 ஆண்டுகள் பழமையானது எனலாம். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, சிவன் கோயிலில் உள்ள கி.பி.1281-ம் ஆண்டு, முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் கல்வெட்டும் இதே எழுத்தமைதியில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொண்டியில் உள்ள சிவன் கோயில் பெயரும் சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயில் தான். இடைக்காலத்தில் குலசேகரப்பட்டினம், தொண்டி ஆகியவை பாண்டியரின் துறைமுகங்களாக விளங்கியவை ஆகும்” இவ்வாறு அவர் கூறினார்.

inscription Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe