பொன்னேரில் திருமணம் ஆன நான்காவது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான லோகேஸ்வரி என்பவருக்கும் பன்னீர் என்பவருக்கும் இருவீட்டாரால் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
நான்கு நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் பெண்ணை கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது, 10 சவரன் நகையை வரதட்சணையாக கேட்ட நிலையில் 5 சவரன் நகைகள் மட்டுமே போட முடியும் என மணப்பெண் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இறுதியில் நான்கு சவரன் நகைகள் மட்டுமே பெண் வீட்டாரால் போட முடிந்துள்ளது.
நகையுடன் சீர்வரிசை, பைக் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த மருமகள் 12 சவரன் நகை கொண்டு வந்ததாகவும், பாக்கி உள்ள ஒரு நகைகளை வாங்கி வருமாறு கணவன் குடும்பத்தினர் லோகேஸ்வரியை திருமணம் ஆன அடுத்த நாளில் இருந்தே வலியுறுத்தி கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு ஏசி வாங்கி கொடுக்குமாறும் தொடர்ச்சியாக கொடுமை செய்து வந்துள்ளனர். மறு வீட்டுக்கு வந்த லோகேஸ்வரி இதனைக்கூறி பெற்றோர்களிடம் அழுதுள்ளார்.
இந்நிலையில் கணவன் வீட்டுக்குச் சென்ற லோகேஸ்வரி வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராத நிலையில் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது கழிவறையில் தூக்கில் இறந்த நிலையில் லோகேஸ்வரி இருந்துள்ளார். உடலை போலீசார் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கணவரான பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் புதுமண பெண்ணின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.