இரிடியம் மோசடி என்ற வார்த்தையைக் கேட்டுக் கேட்டு, செய்தித் தாள்களில் படித்துப் படித்துப் பலருக்கும் சலித்துப்போனாலும், சிலர் அந்த மோசடியில் ஈடுபடுவதும், சிலர் ஏமாந்து பாதிப்புக்கு ஆளாவதும், காவல்நிலையங்களில் வழக்கு பதிவாவதும் தொடர்ந்து நடக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை காட்டி நடந்த மோசடியைப் பார்ப்போம்.

Advertisment

ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அதிமுக 8-வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன். இவர் அக்கட்சியின் செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளராகவும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார். இவருடன் அதிமுக உறுப்பினர்கள் கந்தநிலா மற்றும் ராணி நாச்சியார், மேலும் சிலர் சேர்த்து  தனியார் அறக்கட்டளை நடத்தி வருகின்றனர்.

Advertisment

a5665
காந்த நிலா, பட்டுராஜன், ராணி நாச்சியார் Photograph: (admk)

இந்தக் கும்பல்,  முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தைகள் கூறி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பலரிடமும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னிடம் ரூ.1 கோடியே 38 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன், மாவட்ட சிபிசிஐடி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.  

விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஐயப்பன் வீட்டில் இம்மூவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  15 நாள் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பூமியில் எளிதில் கிடைக்காத இரிடியம், ஒரு வேதியியல் தனிமமும் உலோகமும் ஆகும். ஆண்டுக்கு 3 டன் மட்டுமே பூமியிலிருந்து எடுக்கப்படுவதாகச் சொல்லப்படும், கிடைத்தற்கரிய இரிடியத்துக்கு கள்ளச்சந்தையில் அமோக வரவேற்பு இருக்கிறது. சக்தி வாய்ந்த இரிடியத் தகட்டை வீட்டில் வைத்திருந்தால்,  ஐஸ்வர்யம் பெருகும், நோய் குணமாகும் என்றெல்லாம் ஆன்மிக முலாம் பூசி,  பெரிய அளவில் கிராக்கி இருப்பதால், இரிடியத்தில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் அடையலாம் என்றெல்லாம் கூறி, மக்களை ஏமாற்றுவது தொடர்ந்து நடக்கிறது. 

Advertisment