கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருக்கும் என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் சந்திரசேகர் சென்றார். காரில் ஏறுவதற்கு முன்பு மீண்டும் செய்தியாளர்கள் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். ''எந்த இடத்தில் எந்த கேள்வி கேட்க வேண்டும் என்பது தெரியாதா? ஒரு டெத்திற்கு வந்திருக்கிறேன். இங்கே போய் இந்த கேள்வி கேட்கலாமா? ஆல்ரெடி நாங்கள் எல்லாம் மன கஷ்டத்தில் இருக்கிறோம். புரிகிறதா.. இந்த நேரத்தில் எந்த கேள்வி கேட்க வேண்டும் என்று தெரியாதா?" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.