தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வழங்கியது.
அதோடு, ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தகைய சூழலில் தான், தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா?. அத்தகைய அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா?. இந்த தீர்ப்பை அளிப்பதற்கு முன்பு இத்தகைய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?’ என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி நேற்று இந்த வழக்கின் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி இந்த வழக்கை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று (21-08-25) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஒவ்வொரு பிரச்சினையும் உச்ச நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. சில பிரச்சினைகள், முதலமைச்சர் மற்றும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு இடையில் தீர்க்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆளுநர் மசோதாக்களில் நிறுத்தி வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு அரசியல் தீர்வுகள் உள்ளன. அத்தகைய தீர்வுகள் நடைபெறுகின்றன, ஆனால் அது எல்லா இடங்களிலும் இல்லை. எல்லா இடங்களில் மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு விரைவது இல்லை. முதலமைச்சர் சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார், ஜனாதிபதியைச் சந்திக்கிறார். இந்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன, தயவுசெய்து ஆளுநரிடம் பேசி அவர் ஒரு முடிவை எடுக்கட்டும் என்று கூறும் பிரதிநிதிகள் குழுக்கள் உள்ளன. இந்தப் பிரச்சினையை தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ளலாம். அரசியலமைப்பில் ஒரு காலக்கெடு இல்லாத நிலையில், நியாயமான காரணங்கள் இருந்தாலும் அதை நீதிமன்றத்தால் வகுக்க முடியுமா? மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய விவகாரத்தில் கால நிர்ணயம் வேண்டாம்’ என வாதிட்டார்.
இதனை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு அரசியலமைப்பில் இல்லை எனக் கூறுகிறீர்கள். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும். தவறு நடந்தால் தீர்வு காணப்பட வேண்டும், அரசியலமைப்பின் பாதுகாவலர் உச்ச நீதிமன்றம் தான். மசோதா எப்படி செயல்வடிவம் பெறாமல் இருக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு வைத்திருக்க முடியும்? ஆளுநர் செயல்படாததை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் ஆய்வு செய்யாமல் இருக்க முடியுமா?. அரசமைப்பு பணியாளர்கள் செயல்படாமல் இருந்தால் நாங்கள் தலையிட அதிகாரம் இல்லையா?’ என்று கூறினர்.