''Don't think of us as slaves to property...''- Sanitation workers who shed their pain Photograph: (NELLAI)
அண்மையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நெல்லையில் தங்களுக்கு கொடுத்த உணவு தரமில்லாமல் இருப்பதாகவும், அதை சாப்பிட்டு உடல் நலம் தான் பாதிக்கப்படுகிறது என தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், 'எங்களுக்கு காலை உணவு கொடுத்தாங்க. ஒரு மாசம் ஆச்சு... நாங்கள் ஒரு மாசமா காலை உணவு சாப்பிட்டுட்டு இருக்கிறோம். ஆனால் ஒரு மாசமா சாப்பிட்டு ஃபுல்லா ஆஸ்பத்திரிக்குதான் செலவு பண்ணிட்டு இருக்கோம். இங்க பாருங்கள் இப்படி இருக்கிறது. இதுதான் காலை சாப்பாடு. தரமே இல்லை. தரமே கிடையாது. இதை சாப்பிட்டா வயித்தால வாயாலதான் போகுது.
இந்த சாப்பாட்டைப் போட்டு எங்களை கொல்லப் பாக்குறாங்க. நாங்கள் சாப்பாட்டுக்கு வரல. எங்களுக்கு சம்பளம் கூட்டிக் கொடுங்க என்று தான் கேட்டோம். 540 ரூபாய் எங்களுக்கு சம்பளம் கொடுக்குறாங்க. எங்களுக்கு சம்பளம் 700 ரூபாய் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஆனால் அவர்கள் சம்பளத்துக்கு பதிலாக இந்த சாப்பாட்டை போட்டு எங்களை ஏமாற்றுகிறார்கள். 15 வருஷமா வேலை பார்க்கிறோம். 15 வருஷமா வேலை பார்த்து சம்பளம் கூட்டிக் கேட்டதுக்கு எங்களுக்கு சாப்பாடு போட்டுருக்காங்க. நாங்க சாப்பிட்டோம். எங்க பிள்ளைகள் என்ன சாப்பிடுவாங்க? நாங்கள் சோத்துக்கு அடிமை என்று நெனச்சிட்டாங்க'' என வேதனையை வெளிப்படுத்தினர்.
இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சோதனை ஓட்டமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தூய்மைப் பணியாளர்களிடம் கருத்து கேட்டு அவர்களது தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us