தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், தற்போது கார் ரேஸ் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கவிருக்கும் படம் குறித்து அந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த இடைவெளியில் அஜித்குமார் ‘ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்தச் சூழலில், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அஜித், அதில் கரூர் துயர சம்பவம் குறித்துப் பேசியிருப்பது பலதரப்பட்ட மக்களாலும் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

அந்தப் பேட்டியில் தவெக தலைவர் விஜயின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அஜித், “கரூர் சம்பவத்திற்கு அந்தத் தனி நபரை மட்டுமே காரணம் என்று கூற முடியாது. நாம் அனைவருமே அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஊடகத்துக்கும் இதில் பங்கு இருக்கிறது. நமக்கான கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக கூட்டத்தைத் திரட்டுவதில் நாம் வெறி கொண்ட ஒரு சமூகமாக மாறியிருக்கிறோம். இது முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்கும் கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கே இதெல்லாம் நடப்பது கிடையாது. தியேட்டரில் மட்டும் ஏன் இந்தத் துயரம் நடக்கிறது? சினிமா பிரபலங்களுக்கு மட்டும் ஏன் இது நடக்கிறது? இது முழு சினிமா துறையையும் தவறான முறையில் காட்டுகிறது. நாங்கள் ரசிகர்களுடைய அன்புக்காகவே உழைக்கிறோம். ஆனால் உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பைக் காட்டுவதற்கு வேறு பல வழிகள் உள்ளன. அதே போல், முதல் நாள் முதல் ஷோ கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது” எனப் பேசியுள்ளார்.

Advertisment

தொடர்ந்து, தனது ரசிகர்கள் குறித்துப் பேசிய அஜித், “ரசிகர்கள் என்மீது பொழியும் அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால், அவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து நடிகர்களுக்கு அன்பு காட்ட வேண்டாம்” என அஜித்குமார் பேசியுள்ளார்.இதனிடையே, கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் பகிர்ந்துள்ள இந்தத் தகவல் இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும், அஜித் பேசிய இந்தப் பேச்சுக்களைத் தவெக கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.