சிவகாசியில் முஸ்லிம் வடக்குத் தெரு பகுதியில் 6-வது நாளாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வெற்றி நமதே’ இலவசக் கையேடுகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கிவிட்டு, அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
“துளியளவுகூட என் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்குப் பாதுகாப்பான கவசமாக இருப்போம். உங்கள் மீது வருகின்ற எதிர்ப்புகளைத் தடுக்கின்ற கேடயமாக இருப்போம். பதவிக்காக, அதிகாரத்திற்காக பழகிய பந்த பாசத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. நான் எந்த இடத்தில் இருந்தாலும் ‘சித்தப்பு – அப்பு’ உறவுமுறையை முறிக்க முடியாது. அந்த அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளாக நாம் வாழ்ந்து வருகிறோம். அரசியலில் சில மாற்றங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வரலாம். கூட்டணிகள் எல்லாம் வரும்; மாறும். ஆனால் நிலையான அன்பு என்பது இஸ்லாமியர்கள் மத்தியில் எனக்கு உள்ளது.
என்னைப் பிடிக்காதவர்கள் சில குறைகளை உங்களிடம் சொல்வார்கள். அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கும் என் மீதான பாசத்தை, அன்பை என்றும் தக்கவைக்கும் விதத்திலேயே என்னுடைய அரசியல் நடவடிக்கைகள் இருக்கும். ஒருபோதும் அதற்குப் பாதகமாக நடந்து கொள்ள மாட்டேன்.
இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து என்னைத் தேடிவரும் இஸ்லாமிய சகோதரர்களின் அன்புதான் முக்கியமே தவிர, அவர்களது வாக்குகளை முக்கியம் என்று கருதமாட்டேன். 2011 சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக இருக்கின்ற சகோதரர்களும் எனக்கு வாக்களித்தார்கள். அரசியல் சூழ்நிலைக்காக ஒருபோதும் என் மீது சந்தேகப்பட வேண்டாம். ஒருபோதும் இஸ்லாமியர்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். உங்களுக்குத் துணையாக இருப்பேன். ஏனென்றால், இஸ்லாமியர்களுக்கும் எனக்கும் உள்ளது தகப்பன் – மகன் உறவு” என்றார்.