தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்து வருகிறது. அந்த வகையில் இன்று திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் 85 நாட்களுக்கு பிறகு இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கிரீஸ் சோடங்கர் தலைமையில் குழுவினர் உள்ளே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் 39 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை எம்பி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளைத் தாண்டி புதிதாக பல கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்டவை திமுக கூட்டணிக்கு புதிய வரவாக உள்ளன. அதனடிப்படையில் அந்த கட்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் திமுக தரப்பில் காங்கிரசுக்கு 25 பிளஸ் 1 அளவில் சீட்டுகள் ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செல்வப்பெருந்தகை பேசுகையில், ''காங்கிரஸ் திமுக கூட்டணி என்பது ஐடியாலஜிக்கல் கூட்டணி. இயற்கையான கூட்டணி. ஒரு நம்பிக்கை உள்ள கூட்டணி. மாற்றி மாற்றி பேசாதீர்கள். இதை யாரும் சிதைப்பதற்கு தவறாக எழுதுவதற்கும் முயற்சிக்க வேண்டாம். இந்த கூட்டணி உறுதியான கூட்டணி. தமிழ் நாட்டை காக்கும் கூட்டணி. தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி. மதவாதிகளை, மத நல்லிணக்கத்தை விரும்பாதவர்களை விரட்டுகின்ற கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடம் இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
ராகுல் காந்தி இந்த மண் மீது பற்று வைத்திருக்கிறார். தமிழ்நாடு மீது பற்று வைத்திருக்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகளை தமிழ்நாட்டில் விடமாட்டோம். நாங்கள் தெளிவாக சென்று கொண்டிருக்கிறோம்'' என்றார்.
அப்போது 'திமுக கூட்டணி என்று வந்த பிறகு ஏன் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ''யார் கூட நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். தெளிவாக சொல்லியிருக்கிறோம் நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் 'அரசியல் கட்சி என்றால் எல்லோரும் பேசுவார்கள் என்று கிரீஸ் சோடங்கர் சொன்னார்' என்றனர். ''எந்த இடத்திலும் கிரீஸ் சோடங்கர் இந்த தகவலை சொல்லவில்லை. அவரை வைத்துக் கொண்டே தான் இதை நான் சொல்கிறேன். இப்படி அவரை பற்றி தவறாக பேசினால் நான் அவதூறு வழக்கு தொடர்வேன்'' என்றார் செல்வபெருந்தகை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/28/1011-2026-02-28-14-21-15.jpg)