Donald Trump issues public warning to Iran toTensions at their peak
ஈரான் நாட்டின் ரியால் நாணயத்தின் மதிப்பு பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளதால், அங்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான இறைச்சி, அரிசி போன்ற பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து, சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, ஈரான் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த போராட்டங்கள், நாட்டின் 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன. மேலும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் இறங்கியுள்ளனர். மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையும், ராணுவமும் களத்தில் இறங்கி பலரை கைது செய்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டால், மரண தண்டனை விதிக்கப்படும் என ஈரான் அரசு கடுமையாக எச்சரித்து அதனை நிறைவேற்றியும் வருகிறது.
இதனை கண்டித்த அமெரிக்க, போராட்டக்காரர்களுக்கு தண்டனை கொடுத்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி மேனிஒரு நோய்வாய்ப்பட்ட மனிதர், அவர் தனது நாட்டை முறையாக நடத்த வேண்டும், மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கை எடுத்தால் அவர்களின் உலகத்திற்கு தீ வைப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து ஈரானின் ஆயுதப் படைகளின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அபோல்பஸ்ல் கூறுகையில், “எங்கள் தலைவரை நோக்கி ஆக்கிரமிப்புக் கை நீட்டினால், அந்தக் கையை வெட்டுவது மட்டுமல்லாமல், அவர்களின் உலகத்திற்கும் தீ வைப்போம் என்பதை டிரம்ப் அறிவார்” என்று கூறினார்.
இந்த நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்றால் ஈரானை அமெரிக்க அழித்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்றால் ஈரானை அமெரிக்கா அழித்துவிடும். ஈரான் என்ற நாடு, இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளம் இல்லாதபடி துடைத்தெறியப்படும். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசகர்களுக்கு தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Follow Us