பிரேசிலில் 17வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில், கூட்டமைப்பு உறுப்பினர்களான ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில், எகிப்து, எதியோப்பியா, இந்தோனிசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபி எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.  இந்த மாநாட்டில், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்தும், வரி உயர்வு குறித்து அமெரிக்காவை மறைமுகமாக சாடும் வகையிலும் அறிக்கை வெளியிட்டது. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க உள்ளிட்ட எந்தவொரு நாட்டையும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை

இருப்பினும், கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து அவர் பேசியதாவது, “பிரிக்ஸ் அமைப்பில் உள்ள எவருக்கும் விரைவில் 10 சதவீத வரி விதிக்கப்படும். பிரிக்ஸ் நம்மை காயப்படுத்தவும், நமது டாலரை சீரழித்து, அதை தரநிலையாகக் குறைக்கவும் அமைக்கப்பட்டதால், அவர்கள் நிச்சயமாக 10 சதவீதத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் அது பரவாயில்லை. அவர்கள் அந்த விளையாட்டை விளையாட விரும்பினால், நானும் அந்த விளையாட்டை விளையாட முடியும்” என்று தெரிவித்திருந்தார். கடந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் போது, அமெரிக்க டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் நடைபெற்றதாகவும், அதற்கான முயற்சியை பிரிக்ஸ் கூட்டமைப்பு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது

முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக  டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதற்கான கால அவகாசம் ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைய நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரேசில் மீது 50% வரி உட்பட 8 நாடுகளுக்கு கடுமையான புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50% வரி, அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 30% வரி, புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20% வரி என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி அறிவிப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

பிரேசில் நாட்டில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா என்பவர் தற்போதைய அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நாட்டில் முன்னதாக நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான ஜெய்ர் போல்சனாரோ மோசடி செய்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெய்ர் போல்சனாரோ மீதான விசாரணையை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் டிரம்பின் பேச்சை லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமையிலான பிரேசில் அரசு துளியும் கண்டுகொள்ளவில்லை. இதனால், பிரேசில் மீது அதிக வரியை டிரம்ப் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.