Dolphins camped on the shore - children playing with them Photograph: (srilanka)
இலங்கையின் மன்னார் பகுதியில் கரையை நோக்கி திடீரென டால்பின்கள் கூட்டமாக படையெடுத்த நிலையில் சிறுவர்கள் டால்பின்களை பிடித்து விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள இலுப்பை கடவை பகுதியில் திடீரென 15 மேற்பட்ட டால்பின்கள் கூட்டமாக கடற்கரையை நோக்கி வந்தது. அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதைக்கண்டு ஆச்சரியமடைந்து அந்தப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த அந்தப்பகுதி சிறார்கள் அங்கு குவிந்தனர். கைக்கெட்டும் தூரத்தில் டால்பின்கள் நீந்துவதை கண்டு பரவசப்பட்ட சிறார்கள் அதனை கையில் பிடித்துக் கொஞ்சி விளையாடினர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இலுப்பை கடவை பகுதிக்கு இதுபோன்று டால்பின் கூட்டம் வருவதென்பது இதுதான் முதல்முறை என்கின்றனர் அந்தப்பகுதி மக்கள். பொதுவாக ஆழ்கடலுக்குள் மட்டுமே காணப்படும் டால்பின்கள் கடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றம், உணவு பற்றாக்குறை, தொடர்பு சங்கிலி அற்றுப்போதல் உள்ளிட்ட காரணங்களால் சிறு கூட்டமாக கரைக்கு வரும் வாய்ப்புள்ளது. அப்படியாக அவை மன்னார் பகுதி கடற்கரைக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரொம்ப நேரமாக கடற்கரை பகுதியில் சுற்றிய டால்பின்களிடம் விளையாடி களைத்துப்போன சிறுவர்கள், இளைஞர்கள் அவை அனைத்தையும் படகு மூலம் கொண்டு சென்று ஆழ்கடல் நீரோட்டத்தில் கலக்கும்படி திசைதிருப்பி வழியனுப்பி வைத்தனர்.
Follow Us