Farmer cries after losing his livelihood! Photograph: (pudukottai)
கால்நடைகளின் எண்ணிக்கைக்கு இணையாக நாய்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. அதேபோல நாய்களின் தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள், பெரியவர்கள், ஆடு, மாடுகள் என நாய்களால் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. சிலர் தெருக்களில் கோழி, மீன் கழிவுகளை கொட்டி நாய்களை நோய் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள பொன்னன்விடுதி கிராமம் கால்நடைகள் அதிகம் வளர்க்கும் கிராமம். ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இதன் வருமானத்திலேயே தங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவுகளையும் சமாளித்து வருகின்றனர். தன் வாழ்வாதாரத்திற்காக விவசாயி முருகேசன் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் 20 செம்மறி ஆட்டுக் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். இரவு நேரங்களில் தனது தோட்டத்தில் தனியாக கொட்டகை அமைத்து பாதுகாப்பாக அடைத்து வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை செய்ய தயாராக வைத்திருந்தார்.
இந்தநிலையில் தான், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆட்டுக் கொட்டகைக்குள் தடுப்புகளுக்கு கீழே நுழைந்த நாய்கள் அங்கு நின்ற 20 செம்மறிக் கிடாய்களையும் ஆங்காங்கே கடித்துக் குதறிப் போட்டுவிட்டு ஓடிவிட்டது. வழக்கம் போல காலை ஆட்டுக் கொட்டகைக்கு போய் பார்த்த விவசாயி முருகேசன் தனது 20 ஆட்டுக்கிடாய்களும் குதறப்பட்டு இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார். இதனால் பல லட்ச ரூபாய் கடனாளியாகிப் போனதாக கூறியவர் என் வாழ்வாதாரமே போச்சு. கவனிப்பாரற்று சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், தெருநாய்களால் பலியான 20 ஆடுகளுக்கும் அரசு இழப்பிடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கண்ணீரோடு.
கடந்த வாரம், வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை நகரை ஒட்டியுள்ள கட்டியாவயல் பகுதியில் ஒருவரை கடித்துவிட்டு அங்கிருந்து ஓடி திருவப்பூரில் ஒரு மூதாட்டி உள்பட 2 பேரைக் கடித்த கருப்பு சிவலை நிற நாய் கழுத்தில் பெல்ட் அணிவிக்கப்பட்டுள்ளது. ஜெ.பி மஹால் பகுதியில் ஒருவரையும், அங்கிருந்து அரசு ஐடிஐ க்குள் நுழைந்து ஐடிஐ ஆசிரியர் ரமேஷை கடித்துவிட்டு பாலன் நகர் பக்கம் ஓடிச் சென்று கட்டுமானப் பணியில் இருந்த 5 பேரை கடித்துவிட்டு நகருக்குள் ஓடியுள்ளது.
வெவ்வேறு இடங்களில் ஒரே நாயிடம் கடிபட்ட ஆசிரியர் ரமேஷ், மணிகண்டன் உள்பட 10 பேரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்று முதலுதவி சிகிச்சையும் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். இப்படி கவனிப்பாரற்று சுற்றும் தெரு நாய்களால் தினம் தினம் பல உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கிறது வேதனை அளிக்கிறது.
Follow Us