நாட்டையே பெரும்பாடு படுத்தி வருகிறது நாய்க்கடி சம்பவங்களும் ஆதனால் ஏற்படும் உயிரிழப்புகளும். தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் வெளியிட்டது.

Advertisment

அந்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில் அடைத்து வைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

Advertisment

இந்த தீர்ப்பிற்கு நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தெருநாய்களை அகற்றுவது என்ற போர்வையில் அவற்றை அவதியுற வைக்கக்கூடாது என விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தெருநாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாய்கடி சம்பவம் அதிகரித்து வருவதால், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு ரேபிஸ் நோய் தடுப்பூசி செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளே இருப்பதாகவும் இதனால் வழக்குக்காக வரும் மக்கள் அச்சப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில், இன்று (31-12-25) காலை சென்னை மாநகராட்சி சார்பில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தெருநாய்களை பிடிப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது நாய் ஆர்வலர்கள் அங்கு வந்து தெருநாய்களை பிடிக்கக் கூடாது என ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தெருநாய்கள் எதுவும் பிடிக்கப்படவில்லை என்பதை உறுதி கூறினர். அதன் பின்னர், அந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாய்களை பிடித்துச் செல்வதை கண்டித்து மாநகராட்சி ஊழியர்களுடன் நாய் ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment