நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களால் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, தான் வளர்த்த வளர்ப்பு நாயிடம் கடிபட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்த நிலையில் 'ரேபிஸ்' தொற்று ஏற்பட்டு சேலத்தில் குப்புசாமி என்பவர் நேற்று உயிரிழந்த சம்பவமும் அதேபோல் பிட்புல் வகை வளர்ப்பு நாய் கடித்து சென்னை குமரன் நகர்ப் பகுதியில் கருணாகரன் என்ற நபர் உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருவாரூரில் தெருநாய் ஒன்று வீடு புகுந்து குழந்தை, பாட்டி என இருவரைக் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மேல்கொண்டாழிஎன்ற கி ராமத்தில் வீடு ஒன்றில் புகுந்த நாய் ஒன்று உறங்கிக் கொண்டிருந்த ஒன்றை வயது குழந்தையை கடித்துக் குதறியுள்ளது. சுல்தான் பீவி என்பவரின் குழந்தை அஜ்மல் பாஷாவை நாய் கவ்விச் சென்று கடித்துக் குதறியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளார். நாயை விரட்டக் குழந்தையின் பாட்டி முயன்ற நிலையில் அவரையும் நாய் கடித்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தை மற்றும் பாட்டி திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவமும் மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.