கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள தொல்லவிளை பகுதியைச் சேர்ந்த பிரவீன் - பிரதிபா தம்பதியினர். பிரவீன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பிரதிபா, நாகர்கோவிலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களது 10 வயது மகள் பிரமிகா நவம்பர் 23-ஆம் தேதி மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்வீட்டைச் சேர்ந்த காட் பிரீடர் என்பவரது வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாய் (ஜெர்மன் ஷெப்பர்ட்) சிறுமியைத் துரத்தி சரமாரியாகக் கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு தாய் மற்றும் உறவினர்கள் வெளியே வந்து மகளை மீட்டனர்.
இதையடுத்து, காயமடைந்த சிறுமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாய் கடித்தது குறித்து உறவினர்கள் எதிர்வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், சிறுமியின் தாய் பிரதிபா காட் பிரீடரிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரதிபா, நேசமணி நகர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போன்று எதிர்வீட்டு நாய் பிரதிபாவின் மகனைக் கடித்தது. அந்த விஷயத்தில் போலீசார் “இனிமே வளர்ப்பு நாயை வெளியே விடக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த நாய் பிரதிபாவின் மகளைக் கடித்துள்ளது. தற்போது பிரதிபாவின் புகாரின் அடிப்படையில், எதிர்வீட்டு காட் பிரீடர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் போது சிறுமியை நாய் துரத்தி கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஏற்படும் நாய் கடி சம்பவங்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் ரேபீஸ் (rabies) நோயால் உயிரிழக்கின்றனர், இதில் 36% குழந்தைகள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதனால் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
Follow Us