திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் பிரித்திகா ஸ்ரீ, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். ஆகஸ்ட் 21 அன்று மாலை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சிறுமியைத் தாக்கியது.

Advertisment

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், நாயிடமிருந்து அவரை மீட்டனர். ஆனால், நாய் கடித்ததில் சிறுமியின் மேல் உதடு, நெற்றி, மற்றும் மூக்குப் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக சிறுமியை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நீண்ட காலமாகவே பிரச்சினையாக உள்ளது. இந்தப் பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாகச் சுற்றித்திரிவதால், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில், புள்ளிவிவரங்களின்படி, ஒரு நாளைக்கு சுமார் 10,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஆண்டுக்கு சுமார் 20,000 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தப் பிரச்சினையைத் தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, நிரந்தரமாகக் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணையில், உச்ச நீதிமன்றம், “முந்தைய உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்ட பின்னர், அவை எந்தப் பகுதியில் பிடிக்கப்பட்டனவோ, அந்தப் பகுதியில் மீண்டும் விடப்பட வேண்டும். ரேபிஸ் நோயைப் பரப்பக்கூடியதாகக் கருதப்படும் நாய்களை, பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில் அடைக்க வேண்டும். தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே உணவு வழங்க வேண்டும்,” என்று தீர்ப்பளித்தது. 

அதே சமயம், நாய்க்கடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், அதற்காக வாயில்லா ஜீவனான நாய்களை ஒட்டுமொத்தமாகக் கொல்ல வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, அவற்றை மனிதர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.