நாடு முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான வழக்கில் 'டெல்லியில் 8 வாரங்களில் தெருநாய்களைப் பிடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல் நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வளர்ப்பு நாய் ஒன்று சிறுவன் ஒருவனை கடித்துக் குதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இடங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், இவருடைய மகன் சபரிநாதன். தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சபரிநாதன் இன்று காலை கடைக்கு செல்வதற்காக சைக்கிளை தயார்படுத்திக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாஸ்கர் என்பவர் வளர்த்து வந்த நாட்டு நாய் சிறுவன் மீது பாய்ந்து கடித்தது.

இதில் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த நிலையில் சிறுவனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.