நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (01.07.2025) நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
காலம் செல்லச் சொல்ல, நாட்கள் ஆக ஆகச் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு சார்பில் வேலை வழங்குவதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் பணி நியமன ஆணையை அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் கொடுத்துள்ளார். பணி ஆணை மட்டுமல்லாது அஜித்குமாரின் வீட்டுக்கு இலவச மனைப் பட்டாவும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர், அதன் பிறகு திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்வதற்காக வந்திருந்தார். காவல் நிலையம் அருகில் உள்ள டிராவலர்ஸ் பங்களா விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரணையை நீதிபதி ஜான் சுந்தர் தொடங்கினார். மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதவிகள், பென்டிரைவ் உள்ளிட்ட வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்புவனம் ஏ.டி.எஸ்.பி.சுகுமார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் நீதிபதி விசாரணையைத் தொடங்கியுள்ளார்.