doctor removed through treatment A gold nose ring was lodged in the lungs
அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 50 வயது பெண்மணி, தவறுதலாக அவரது மூக்குத் திருகாணி நுரையீரலில் உள் நுழைந்ததை அறிந்து கடலூர் கோவன் நுரையீரல் சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் பால கலைக்கோவனை நாடினார். நுரையீரல் எக்ஸ்ரேவில் அந்த திருகாணி இருந்த இடத்தை கண்டறிந்து உடனடியாக பிராங்கோஸ்கோப்பி (நுரையீரல் உள்நோக்கு கருவியின் ) துணை கொண்டு சிகிச்சை செய்து அந்தப் பெண்மணிக்கு எந்தவித சிரமமும் இன்றி, பாதுகாப்பாக மருத்துவர் கலைக்கோவன் தங்க மூக்குத்தி திருகாணியை அகற்றினார்.
இதற்கு முன்னர் நுரையீரலில் மாட்டிக்கொண்ட நிலக்கடலை, பென்சில், பல், ஊக்கு போன்ற பல பொருட்களை மருத்துவர் கலைக்கோவன் அகற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கடலூர் கோவன் நுரையீரல் மையத்தின் தலைமை மருத்துவர் பால கலைக்கோவன் கூறியதாவது, “நுரையீரலில் மாட்டிக் கொள்ளும் பல்வேறு பொருட்களை கடந்த காலங்களில் அகற்றுவது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் நுரையீரல் உள்நோக்கி கருவி துணை கொண்டு அதை சுலபமாக பாதுகாப்பாக இப்போது அகற்றி வருகின்றோம். மருத்துவ பயனாளியும் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றார்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்களது வாயில் ஏதேனும் பொருள் இருக்கும்பொழுது புறையேற்றம் ஏற்பட்டால் இது போன்ற விபத்துக்கள் நடந்து நுரையீரலில் அந்த பொருள் நுழைய வாய்ப்புகள் அதிகம். பதட்டம் இன்றி அருகில் உள்ள மருத்துவரை நாடி நுரையீரல் எக்ஸ்ரே செய்தால் அது எங்கே இருக்கின்றது என்றும் அதற்கு ஏற்ற சிகிச்சை ஆலோசனைகளையும் மருத்துவர்கள் வழங்குவார்கள். கத்தியின்றி ரத்தம் இன்றி அந்தப் பொருட்களை அறிவியலின் துணை கொண்டு பாதுகாப்பாக எடுக்க இயலும். ஏற்கனவே நமது கோவன் மருத்துவமனையில் இது போன்ற நுரையீரலில் மாட்டிக் கொண்ட பல பொருட்களை எடுத்து இருந்தாலும் தங்கத்திலான ஒரு பொருள் எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்” என்று கூறினார்.
Follow Us