கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே மாரத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முனிரெட்டி. இவரது மகள், 29 வயதான கிருத்திகா ரெட்டி, பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தோல் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்தச் சூழலில் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த 34 வயதான மருத்துவர் மகேந்திர ரெட்டிக்கும் கிருத்திகாவுக்கும் இடையே, பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கிருத்திகா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது ஒரு நாள் அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே கணவர் மகேந்திர ரெட்டி, மனைவி கிருத்திகாவுக்கு ஐ.வி. மூலம் மருந்து செலுத்தியுள்ளார். ஆனால், அடுத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் 23 அன்று கிருத்திகா வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கிருத்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Advertisment

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், கிருத்திகாவின் பெற்றோர் முதலில் புகார் அளிக்க மறுத்துவிட்டனர். மேலும், கணவர் மகேந்திர ரெட்டி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறியதையடுத்து, கிருத்திகாவின் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். இருப்பினும், காவல்துறையின் தொடர் வற்புறுத்தலால் கிருத்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், அவரது உடல் உறுப்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இந்தச் சூழலில் அக்டோபர் 13 அன்று வெளியான பிரேதபரிசோதனை அறிக்கையில், அதிகளவில் மயக்க மருந்து செலுத்தி கிருத்திகா கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மகேந்திர ரெட்டியை போலீசார் விசாரித்தபோது, கிருத்திகாவை கொலை செய்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். 

Advertisment

கிருத்திகாவுக்கு அடிக்கடி உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதால், அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய மகேந்திர ரெட்டி திட்டமிட்டுள்ளார். அதன்படி, உடல்நலக் குறைவால் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த கிருத்திகாவுக்கு ஐ.வி. மூலம் அதிகளவு மயக்க மருந்து செலுத்தி மகேந்திர ரெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஷ்டடியில்  எடுத்துள்ளனர்.

பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, கிருத்திகா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு முன்னாள் காதலி உள்பட 5 பெண்களுக்கு மகேந்திர ரெட்டி மெசேஜ் அனுப்பியது தெரியவந்தது. மகேந்திர ரெட்டியுடனான காதல் முறிவை அடுத்து அவரது முன்னாள் காதலி, வாட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் மகேந்திர ரெட்டியைப் பிளாக் செய்து வைத்துள்ளார். 

அதனால், முன்னாள் காதலிக்கு போன் பே மூலம் “நான் உன்னுடன் வாழ்வதற்காகத்தான் எனது மனைவியை கொன்றேன்” என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ஆனால், அவர் அதனையும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மற்றொரு முன்னாள் காதலியான மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு “என் ஜாதகத்தில் முதல் மனைவி இறந்து விடுவார் எனக் கூறப்பட்டிருந்தது. அதனால்தான் உன்னை நிராகரித்தேன். தற்போது எனது முதல் மனைவி இறந்துவிட்டார். அதனால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று மெசேஜ் செய்திருக்கிறார். இப்படியே மேலும் மூன்று பெண்களுக்கு டாக்டர் காதல் வலை வீசியிருக்கிறார். ஆனால், அவர்கள் யாருமே மகேந்திர ரெட்டியிடம் சிக்காமல் தப்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது போலீசாரின் விசாரணையில்  அம்பலமாகியிருக்கிறது இது தொடர்பான ஆதாரங்களைக் கைப்பற்றிய போலீசார், வாழ்நாள் முழுவதும் மகேந்திர ரெட்டி சிறைத்தண்டனை அனுபவிப்பதற்காகத் பிடியை இறுக்கி வருகின்றனர்.