செய்தி அறிக்கைகளைப் படித்துவிட்டு வழக்கு தொடுப்பதைத் தவிருங்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கனரா வங்கியின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனமான கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட் (CFHL) நிறுவனத்தில் ஆட்சேர்ப்புகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து செபி (SEBI) அல்லது சிபிஐ (CBI) சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (23-07-25) வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘ஆட்சேர்ப்பில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாக ஒரு நபர் வங்கியில் புகார் அளித்ததாக ஒரு செய்தி அறிக்கையில் வந்தது. அந்த அறிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கு முடித்து வைக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஒரு செய்தி அறிக்கையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாது. செய்தித்தாள் அறிக்கையின் ஆதார மதிப்பு என்ன? நீங்களே ஆராய்ச்சி செய்துகொள்ளுங்கள். இந்த போன்ற மனுக்கள், ஏதாவது ஒரு செய்தி அறிக்கையை எடுத்துக்கொண்டு வருகின்றன.
செய்தித்தாளைப் படித்த பிறகு உங்கள் கற்பனை என்னவாக இருக்கும்? குற்றம் நடந்திருந்தால் செபியையோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியையோ ஏன் அணுகவில்லை?. பொதுநல வழக்குச் சட்டத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பெரும்பாலும் செய்தித்தாள்கள் மூலம், ஒன்று அல்லது இரண்டு தகவல்களைச் சேகரித்துவிட்டு இது போன்று பொதுநல வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றங்கள் அல்லது பிற தரப்பினரை ஆதாரங்களை சமர்பிக்கச் சொல்லும் ஒரு போக்கு தற்போது அதிகமாக நடந்து வருகிறது. நீங்கள் சொந்த வீட்டுப்பாடத்தை முதலில் செய்ய வேண்டும்” என்று கூறி மனுதாரரின் அந்த பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.