கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடும் தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
2 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலில் 18,500க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 64,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதால் காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவையான உணவு, இருப்பிடம், உடை ஆகியவைகள் இல்லாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர்.
குழந்தைகள் உட்பட பலரும் உணவுக்காக கையேந்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் உலுக்கியுள்ளது. உணவின்றி தவித்து வருவதால், லட்சத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் இரவு பகலென்று பாராமல் தங்களது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தொடர் தாக்குதல் சம்பவம் காரணமாக காசாவுக்கு வரும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு மக்களை சென்றடைகிறது. பசி காரணமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பலர் உயிரிழக்கும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் காசாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் தவிக்கும் பெண்கள் அங்கு உதவிக்கு வரும் ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக வரும் ஆண்கள் பெண்களின் தொலைபேசி எண்களை பெற்று பின்னர் தவறான நோக்கத்தில் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. உள்ளூர் ஆண்கள் கூட இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.