தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு நேற்று (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணிநேரமாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது விலகலாமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் ஆதரவாளர்கள் இடையே இருந்ததாகக் கூறப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அதனுடைய தலைவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்' என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு முறை ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள், 'உங்களுடனே இருந்தார். 25 ஆண்டுகள் கட்சிக்காக பணியாற்றியுள்ளார். அவரை சரி செய்து உங்களுடனே வைத்திருக்கலாம். உங்களுக்கு தலைமை ஆளாக இருந்தார். உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். இப்படி விட்டு விட்டீர்களே? உங்களுக்கு மனது வலிக்கவில்லையா? வருத்தமாக இல்லையா?' எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த செல்லுராஜு, 'ஓபிஎஸ்-ஐ பற்றி தவறாகப் பேசுவது தவறு. பாவம் அது இது எல்லாம் சொல்லக்கூடாது. வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். பன்னீர்செல்வம் யார் தெரியுமா? அவரை தரைகுறைவாக பேசக்கூடாது' எனச் சொல்லி திடீரென செல்லூர் ராஜு செய்தியாளர்களைக் கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.