கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “தன்னைப் பற்றி வேறொருவர் பெயரில் புத்தகம் எழுதி, அதில் தன்னையே வீரர் என்று குறிப்பிட்டுக் கொண்டவர் தான் சாவர்க்கர். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றவர் சாவர்க்கர். மகாத்மா காந்தி, நேரு, பட்டேல் உள்ளிட்டோர் சிறையில் வாடியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இதுபோன்ற மன்னிப்புக் கடிதம் எழுதியதில்லை” என்று பேசினார். மேலும் அவர், சாவர்க்கரை காலனித்துவ அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெற்ற பிரிட்டிஷ் வேலைக்காரன் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, பா.ஜ.கவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில், சாவர்க்கருக்கு எதிராக ராகுல் காந்தி கூறிய கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான அத்தகைய கருத்துக்களை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறியது.
இந்த நிலையில், இந்துத்துவா தலைவர் சாவர்க்கர் பற்றி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி படித்து தன்னை தெளிவுப்படுத்திக் கொள்ள உத்தரவிட வேண்டும் என அபினவ் பாரத் காங்கிரஸ் அமைப்பின் நிறுவனர் தலைவரான பங்கஜ் கும்ய்சந்திர பட்னிஸ் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கள் முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்றதாக இருக்கிறது. மேலும் அவர் நிறைய குழப்பங்கள் உருவாக்குகிறார். அதனால் சாவர்க்கர் பற்றி படித்து தன்னை தெளிவுப்படுத்திக்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பான மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி சந்தீப் மார்னே ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘உங்கள் மனுவை தனிப்பட்ட முறையில் படித்துப் பார்க்கும்படி அவரை வழிநடத்த வேண்டும் என உங்கள் மனுவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் மனுவை படிக்கும்படி நீதிமன்றம் எப்படி அவரை கட்டாயப்படுத்த முடியும்?.’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் கூறியதாவது, ‘அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். அவர் குழப்பங்களை உருவாக்குகிறார். ஒருவேளை அவர் பிரதமரானால், நிறைய பேரழிவை உண்டாக்குவார்’ என்று கூறினார்.
உடனடியாக நீதிபதிகள், ‘எங்களுக்கு தெரியாது. அவர் பிரதமர் ஆவார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர மனுதாரருக்கு சட்டப்பூர்வ தீர்வு இருக்கிறது. சாவர்க்கரின் பேரன் ஏற்கெனவே அவதூறு வழக்கு ஒன்றை புனே மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இதே பிரச்சனையில் ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறு மனுதாரரின் மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.