DMK's Rajiv Gandhi condemns Vijay at namakkal speech
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மூன்றாவது கட்டமாக இன்று (27-09-25) நாமக்கல்லில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை வழங்கியதும் இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் ஒருத்தர் தான். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்பராயன். அவருக்கு நாமக்கல்லில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி நம்பர் 456 கொடுத்தது யாரு? சொன்னார்களே செய்தார்களா? வடிவேல் சார் எம்டி பாக்கெட்டை எடுத்து ஒரு படத்தில் காட்டுவாரு. அதுமாதிரி வாக்குறுதியை படித்துவிட்டு பாக்கெட்டை எடுத்து காட்டுகிறார்கள்” என திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சுப்பராயனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என விஜய் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், திமுகவின் ராஜீவ் காந்தி அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/27/manima-2025-09-27-17-26-43.jpg)
திமுக மாணவர் அணிச் செயலாளரான ராஜீவ் காந்தி தனது சோசியல் மீடியாவில் இது குறித்து பதிலளித்துள்ளதாவது, “விஜய் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என ‘கீச்சி’ ட்டுள்ளார். கடந்த 2024 மே மாதம் நாமக்கல் மாவட்டம், தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ப.சுப்பராயனுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த ஓராண்டாக இதன் கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.