காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு நாளை (11-02-26) நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் (BYO) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டிற்காக 10,00,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாகத் தனித்தனி அமர்வு பகுதிகள், முகவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இயக்கத்தின் கீழ் முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார். முகவர்களின் நலன் கருதி திடலில் மினி கிளினிக், மருத்துவக் குழுக்கள், தீயணைப்புத் துறை பாதுகாப்பு மற்றும் நகரும் கழிவறை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், தொண்டர்களை உற்சாகப்படுத்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகளை ஆ. ராசா எம்.பி. மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர். 2026 தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. திருவிடந்தையைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் திருப்பத்தூர் (பிப். 14), மதுரை (பிப். 21) மற்றும் கோவை (பிப். 27) ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த மண்டல மாநாடுகள் நடைபெறவுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/10/dmkvaakku-2026-02-10-18-48-11.jpg)