சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திமுக ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பாடலைக் கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் வெளியிட்டது. இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் இப்போது ‘ட்ரெண்ட்’ ஆகி வருகிறது. யூடியுப் தளத்தில் கடந்த 4 நாட்களில் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்த அரசியல் பாடலாக உருவெடுத்திருக்கிறது 

Advertisment

கடந்த 2021 தேர்தலில் திமுக வெளியிட்ட ‘ஸ்டாலின் தான் வர்றாரு’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது. திரைப்படப் பாடல்களை முணுமுணுப்பதைப் போல இந்தப் பாடலை அப்போது பலர் முணுமுணுத்து வந்தனர். அதே போல, வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காகவும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குப் பாஜகவால் ஆபத்து என்பதைச் சொல்லும் வகையில் ‘பெரும் பெரும் பருந்து வரும் வரும் ஒளிந்து நடிப்பினைப் புரிந்து துரத்துவோம் துணிந்து’ என்று தொடங்கும் பாடல் ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் இலக்குடன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் திமுகவின் மேடைகள் தோறும் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. திமுகவினர் சிலர், இந்தப் பாடலை தங்களது மொபைல் போனில் ரிங் டோனாகவும் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

Advertisment