‘’திருமாவளவன் கட்சியை திமுக விழுங்கிவிடும்.’’ -தஞ்சையில் இபிஎஸ் அதிரடி பேச்சு

a4511

"DMK will swallow up Thirumavalavan's party." - EPS's dramatic speech in Thanjavur Photograph: (admk)

தமிழகத்தில் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும்  எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சை பாபநாசம் தொகுதியில் மக்களை சந்தித்தார். இதையடுத்து தஞ்சை ரயில் நிலையம் அருகேயுள்ள காந்திஜி சாலையில் மக்களிடம் உரையாற்றிய அவர்,

“தஞ்சை மாநகரமே குலுங்குகிறது. இது எழுச்சி பயணமல்ல, வெற்றி விழா போல காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது.  முதல்வர், திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என எல்லோருமே ஏதோ நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது போன்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

டெல்டா மாவட்டத்தை திமுக கோட்டை என்கிறார் ஸ்டாலின். இங்கு தஞ்சை மாநகரில் வந்து மக்கள் எழுச்சியைப் பாருங்கள், டெல்டா அதிமுக கோட்டை என்பதை உணர்வீர்கள். மேட்டுப்பாளையத்தில் நான் எழுச்சிப் பயணத்தை தொடங்கியபோது தஞ்சை வந்து பாருங்க, டெல்டா வந்து பாருங்க என்கிறார், எங்கள் கோட்டைக்குள் நுழைந்து பாருங்கள் என்றார், உங்க கோட்டை எல்லாம் இப்போது தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டது.

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தான் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், விவசாயிகள் வைத்த கோரிகையை ஏற்று மத்திய அரசோடு தொடர்புகொண்டு, டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். இனி எந்தக் காலத்திலும் எந்த தொழிற்சாலையும் உங்கள் டெல்டாவுக்கு வராது, உங்கள் பூமி உங்களுக்கே சொந்தம். தில்லு திராணி இருந்தா இதற்கு பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்.

தஞ்சையில் வடசேரி நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சி நடந்தது, அம்மா அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சட்டப் பாதுகாப்புடன் கொடுத்ததால் பாதுகாக்கப்பட்டது. இல்லையெனில் நிலக்கரி சுரங்கத்துக்கு எடுத்திருப்பாங்க, ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அதிமுக அரசு தான் உதாரணம்.

மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம், இப்போது மின் தடை ஏற்படுகிறது. குடிமராமத்துத் திட்டம் கொடுத்தோம். நதியின் குறுக்கே ஓடையின் குறுக்கே தடுப்பணை கொடுத்தோம். நிலத்தடி நீர் உயர்த்தினோம். வேளாண்மையில் நல்ல விளைச்சல் கிடைத்தால் தான் வாழ முடியும். மக்களிடம் ஏமாற்றி வாக்கு கேட்கவில்லை. எம்ஜிஆரும், அம்மாவும் மறைந்தாலும் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள், அவர்கள் தொடங்கிய கட்சி.

நான் விவசாயி… ஒரு விவசாயி முதல்வராக வர கூடாதா? தமிழ்நாடை திமுகவுக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்களா…? அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். உங்களைப் போல குடும்பக் கட்சி இல்லை. நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்படடுவிட்டது, ஆனால், திமுக மன்னராட்சி கொண்டுவரத் துடிக்கிறது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது 2026 தேர்தல். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி இவங்கதான் வரணுமா? நாட்டு மக்களுக்கு வேறு ஆளே இல்லையா?

திமுகவுக்காக உழைத்தேன் என்று சொன்னார் ஸ்டாலின். திமுகவுக்காக உழைத்தவர்களை எல்லாம் ஓரம்கட்டி வச்சிருக்கீங்க. கருணாநிதி நூற்றாண்டு விழா கண்காட்சியில் ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டது போன்ற ஒரு காட்சி இருந்தது. உண்மையிலேயே அவர் சிறைக்குச் செல்ல வேண்டியவர்தான். 2026 தேர்தல் முடிந்து அது தெரியும். உண்மையாக கஷ்டப்பட்டவருக்குத் தான் பதவி கொடுக்க வேண்டும்.  உதயநிதி எத்தனை போராட்டத்தில் கலந்துகொண்டார்..?. துரைமுருகன் தான் அதிகமாக திமுகவுக்காக உழைத்தவர், அவருக்கு பதவி இல்லை.

திமுகவை பொறுத்தவரை குடும்பம்தான் ஆட்சி, கட்சியில் இருப்பவர்களுக்கு இடமில்லை. இன்பநிதி வந்தாலும் ஏற்பேன் என்கிறார் நேரு. அப்படி சொல்லவில்லை என்றால் பதவியை விட்டு தூக்கிடுவாங்க. 1989ல் நான் எம்.எல்.ஏவாக இருந்தபோது அமைச்சராக இருந்தவர் நேரு. அவரே இப்படி சொல்கிறார். திமுகவில் உழைத்தவர்களுக்கு இடமில்லை. திமுகவில் எல்லோருக்கும் தலைவர் பதவி கிடைக்கும், முதல்வர் பதவி கிடைக்கும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

அதிமுக -  பாஜக கூட்டணி எப்படி உருவாகலாம் என்று கேட்கிறார் ஸ்டாலின்.  என்ன தப்பு.. உங்களுக்கு ஏன் எரிகிறது..? எங்கள் கட்சி இது. நாங்கள்  யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இரண்டு கட்சிகளுக்கும் திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். தினமும் விசிக தலைவர் பேட்டி கொடுக்கிறார், எடப்பாடி எனக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாகச் சொல்கிறார், நிறைய சீட் தருவதாகச் சொல்கிறார் என்றெல்லாம் சொல்கிறார். நாங்க எங்கே அப்படி சொன்னோம்..?  எப்போது சொன்னோம்..? எங்களை வைத்து அடையாளம் தேடாதீர்கள். திருமா கட்சியை திமுக விழுங்கிவிடும்.

100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவேன் என்றார்.  செய்தார்களா? கேஸ் மானியம், மின் கணக்கீடு மாதம் ஒரு முறை மாற்றினார்களா? கல்விக் கடன் ரத்து செய்தார்களா? ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை கொடுக்கவில்லை. முதல்வர் 98% வாக்குறுதி நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார். திமுக கூட்டணிக் கட்சிகள் மக்கள் பிரச்னைகளைப் பேசுவதில்லை. திமுக கூட்டணிகள் ஜால்ரா அடிபப்தோடு சரி வேறு எதுவும் செய்வதில்லை, இவர்கள் இந்த நான்காண்டுகள் மக்கள் பிரச்னைக்கு போராடினார்களா? தேர்தல் நேரத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்த ஆட்சியில் எல்லாமே பிரச்னைகள். உரம் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு, கடைமடை வரை தண்ணீர் சேரவில்லை, பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கவில்லை, அதெல்லாம் தட்டிக்கேட்க வக்கிலாதவை திமுக கூட்டணி கட்சிகள்.

மின் கட்டணம் 52% உயர்ந்துவிட்டது. பல தொழில்கள் வெளி மாநிலத்துக்கு போய்விட்டது, இவற்றைப் பற்றி பேசினார்களா..? அதிமுக தான் தொண்டை தண்ணீர் வற்றும் வரை கத்துகிறது. அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். பத்திரபதிவு கட்டணமும் உயர்த்திட்டாங்க. ஊர் ஊராகப் போய் நீட் தேர்வை ரத்து செய்வோம், ரகசியம் தெரியும் என்றனர். நான்காண்டு ஆச்சு ஏதாவது செஞ்சாங்களா? ஏமாத்திட்டாங்க. உங்களை நம்பி 25 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். அதற்கு திமுக தான் பொறுப்பு.

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. கடன் வாங்கியதில் தான் சூப்பர் முதல்வர். திமுக ஆட்சி முடியும்போது 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். நிதி மேலாண்மை சரிசெய்யப்படும் என்றார், நிபுணர் குழு அமைத்து வருவாய் உயர்த்துவோம் என்றார். ஆனால் நிபுணர் குழு அமைத்து கடன் வாங்கியதுதான் மிச்சம். தஞ்சை தொகுதியில் நிறைய திட்டங்களை நிறைவேற்றினோம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், மாநகராட்சியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல பணிகளை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

மாநகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், வணிகவளாகம், சரபோஜி மார்கெட், காமராஜ் மார்க்கெட், பாதாள சாக்கடை திட்டம், பூங்கா, குளம், சுற்றுச்சூழல் பூங்கா, மழைநீர் வடிகால், புறவழிச்சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், கும்பாபிஷேகம், மேம்பாலம், கல்லணை கால்வாய் திட்டம் இப்படி இவ்வளவு திட்டம் கொடுத்திருக்கோம். திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதம் ஆச்சு ஏதாவது திட்டம் கொடுத்தாங்களா? அதிமுக திட்டங்களை நிறுத்தியதும், உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதும்தான் திமுகவின் சாதனை.

திமுக மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீடுவீடாக போய் உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள். இதற்கு முன்பு  ஏதாவது ஒரு கட்சி இப்படி செய்திருக்கிறதா..? ஸ்டாலின், உதயநிதி வந்தபிறகு திமுகவுக்கு உறுப்பினர் குறைந்துவிட்டது.  வீடுவீடாகப் போய் உறுப்பினர் சேர்க்கும்போதே அந்த கட்சி வீக் என்பது உறுதியாகிவிட்டது.

உங்களுடன் ஸ்டாலின் என்று நோட்டீஸ் எடுத்து வருகிறார். இன்னும் 8 மாதம் தான் இருக்கு, இந்த 46 பிரச்னையை 45 நாளில் தீர்ப்பாராம், இதை நம்பலாமா? ஏன் நான்கு வருடங்களாக மக்களின் குறைகளைக் கேட்கவில்லை. இது தேர்தலுக்காக நடக்கும் ஏமாற்று வேலை. அதிமுக மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் கட்சி, அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் எண்ணப்படி செயல்படும். அப்படிப்பட்ட அரசு மீண்டும் வர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்று உரக்கக் குரல் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

 

 

 

dmk admk edappaadi palanisamy Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Subscribe