'DMK will get a victory that surpasses the polls' - Interview with Chief Minister M.K. Stalin Photograph: (mkstalin)
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வாரம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் இன்று (30/08/2025) வெளிநாடு செல்ல புறப்பட்ட நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ''என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் தமிழ்நாடு அமைதி மாநிலமாக, திறமையான இளைஞர்கள் கொண்ட மாநிலமாக, வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற மாநிலமாக, திராவிட மாடல் ஆட்சி உயர்ந்திருக்கும் காரணத்தினால் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பற்கு இதுவரைக்கும் ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு மேற்கொண்டேன்.
அமெரிக்கா பயணத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஸ்பெயினில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஜப்பான் பயணத்தில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஐக்கிய அரபு அமீரக பயணத்தில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யக்கூடிய 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 18,498 கோடி ரூபாய் மதிப்புடைய முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்துள்ளேன்.
இந்த 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. இதனுடைய தொடர்ச்சியாக தான் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் புறப்பட்டுச் செல்கிறேன்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/30/a5038-2025-08-30-09-57-22.jpg)
அப்போது செய்தியாளர் ஒருவர் 'தேர்தலுக்கு இன்னும் சிறிது காலம் தான் இருக்கிறது. புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?' என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ''புதுக்கட்சிகள் வருகிறதோ வரவில்லையோ புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. யார் எத்தனை பிரச்சனை செய்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு. பீகாரில் கூட தேர்தல் ஆணையம் நினைப்பது நடக்காது. ஏனென்றால் அங்குள்ள மக்களை எழுச்சி பெற வைக்க தேர்தல் ஆணையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது'' என்றார்.
செய்தியாளர் ஒருவர் 'சி ஓட்டர் கருத்துக்கணிப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன?' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், ''எந்த கருத்துக் கணிப்புகளாக இருந்தாலும் எல்லா கருத்துக்கணிப்புகளையும் மிஞ்சிய வெற்றிதான் திமுகவுக்கு கிடைக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை'' என்றார்.
முன்னதாக வெளிநாடு செல்ல புறப்பட்ட முதல்வரை திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.