வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வரதரெட்டிபள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பண்டபள்ளி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி மையத்தை, திமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு பெருந்தலைவர் சத்யானந்தம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடியாத்தம் ஒன்றிய அலுவலகத்திற்குக் கிளம்பிய ஒன்றியக் குழு பெருந்தலைவரின் வாகனத்தை, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மறித்து, 100 நாள் வேலை வழங்கக் கோரியும், பஞ்சாயத்து தீர்மானத்தில் பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு கனவு இல்லத் தொகுப்பு வீடு வழங்காமல், திமுகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கு தொகுப்பு வீடு வழங்கியதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி தரமில்லாமல் இருப்பதாகவும், மேலும் இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரக் கோரியும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றியக் குழு பெருந்தலைவரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டபோது, வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றியக் குழு தலைவரின் உத்தரவாதம் அளித்தும், இதுவரை 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி, பெண்கள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்றியக் குழு தலைவர் 100 நாள் வேலை வழங்கவும், தொகுப்பு வீடு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.