திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் 57 வயதான பழனிசாமி. இவர், செப்டம்பர் 10-ம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாகவும் கட்டுப்பாடின்றியும் வந்த ஒரு கார், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டதாகப் பொதுமக்கள் மங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

மங்கலம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சாமளாபுரம் பேரூராட்சி திமுக தலைவர் விநாயகா பழனிசாமி, மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உயிரிழந்த பழனிச்சாமியின் மகன் சுகுமார் தனது தந்தை இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

உயிரிழந்த பழனிசாமி, சமூக ஆர்வலராக இருந்தவர். இவர், மக்களுக்கு பயன்பாடு இல்லாத தனியார் இடத்தில் அமைக்கப்பட்ட சாலை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதனால், அந்தப் பணி நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் பழனிசாமிக்கும், பேரூராட்சித் தலைவர் விநாயகா பழனிசாமிக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டிருந்தது. இதனால், விநாயகா பழனிசாமி ஆத்திரத்தில் இருந்ததாகத் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான் செப்டம்பர் 10-ம் தேதி மாலை, மது போதையில் காரை ஓட்டி வந்த விநாயகா பழனிசாமி, சமூக ஆர்வலர் பழனிசாமி இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பார்த்து, முன்விரோதம் காரணமாக வேண்டுமென்றே அதிவேகமாகக் காரை இயக்கி மோதி, அவரைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, விநாயகா பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

விநாயகா பழனிசாமி, தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். கடந்த பேரூராட்சித் தேர்தலில் அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வாய்ப்பு அளிக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் திமுகவில் இணைந்து பேரூராட்சித் தலைவர் பதவியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.