புதுச்சேரியும் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்விலும் தெரியவந்ததை உண்மை இல்லை என மறுப்பதா? என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திமுக சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் பாஜக நமச்சிவாயம், ஆளும் பாஜக என்.ஆர் கூட்டணி பற்றி குறை சொல்ல கொஞ்சமும் தகுதியில்லை என்றும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த அரசு மீது ஏதோ ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சரின் கடிதத்தில் உள்ள புள்ளி விபரங்கள் எடுத்து வைத்து பேசுகின்றனர் என்று செய்தியாளர்கள் மத்தியில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசியிருக்கிறார். இடைநிற்றல் தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தில் வெறும் 69 பேர்தான் உள்ளனர் என்றும  பத்தாயிரம் பேர் என தவறுதலாக வந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் 2023- 2024ம் ஆண்டு கல்வி அமைச்சகம் ஒரு வலைதளத்தை உருவாக்கினார்களாம், அதில் எல்லோரும் பதிவு செய்ய வேண்டும் என்ற போது நிறைய இடங்களில் பள்ளி மாறும்போது மாணவர்கள் பதிவு செய்யவில்லையாம். எனவே அவர்கள் அதை இடைநிற்றல் என்கிற கருத்தில் கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாம். இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளாராம். அமைச்சர் சொல்வது போல, 10054 மாணவர்களின் தரவுகளை முறையாக ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யாததால் தான் இந்த பிரச்னை என்றால், இந்த தரவுகளை முழுமையாக ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அமைச்சர் வெளியிடுவாரா? இந்த தவறுக்கு அதிகாரிகள் பொறுப்பா? கல்வித்துறை அமைச்சர் பொறுப்பா? மேலும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதுச்சேரி மாநில முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 10054 இடைநிற்றல் தகவல் உண்மை இல்லையெனில், ஒன்றிய கல்வி அமைச்சர் தவறான தகவலை வெளியிட்டதாகவும், உண்மை நிலை என்ன என்பதை விளக்கி அறிக்கை  வெளியிடுவாரா? என்பதை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ கொண்டுவந்ததால் தேர்ச்சி சதவீதம் பாதிப்பு என நாங்கள் அவதூறுகளை அள்ளி வீசி வீசுகிறோம் என்று கூறும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினால் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பற்றி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என நான் வலியுறுத்தி நான்கு மாதங்கள் ஆகப்போகிறது. பள்ளி இடைநிற்றல் என்பது அன்னையின் பாலூட்டலை புறக்கணிப்பதற்கு நிகரானது. குழந்தையின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல; தாய் சார்ந்த அந்தச் சமூகத்திற்கும் பேராபத்தை விளைவிக்கும் ஆபத்திற்கு ஒப்பானது. இந்த ஆபத்து புதுச்சேரியில் அச்சுறுத்தலாய் இருக்கும் நிலையில் இடைநிற்றல் என்கின்ற இடர்பாடை பாஜக கூட்டணி அரசு தகர்த்தெறிய தவறிவிட்டது.

Advertisment

காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் திட்டம், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தும்  திட்டம் போன்ற சீர்மிகு திட்டங்களால் தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, இந்திய மாநிலங்களில்  தனி சாதனையை நிரூபித்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப்பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019ல் 99 பேர் என்பது, கடந்த ஆண்டு அதாவது 2024ல்  100 பேராக உயர்ந்துள்ளது. அதேபோலச் சிறுமியர் எண்ணிக்கை 97.5 இல் இருந்து 100% 2024 இல் அதிகரித்து, இடையில் பள்ளி படிப்பை விடுவோர் ஒருவரும் தமிழ்நாட்டில் இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் மேல்நிலைப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019ல் 81.3 ல் இருந்தது. இதுவே 2024ல் 89.2% ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்த வரை 2019ல்  89.4% ஆக  இருந்தது, 2024இல் 95.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  ஆளும் மாநிலங்களான  பீகார், அசாம், ஹரியானா போன்ற மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரியும் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்விலும் தெரியவந்ததை உண்மை இல்லை என மறுப்பதா? எங்களின் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனில் புதுச்சேரி மக்களிடம் தரவுகளுடன் பேசத்தயாரா? சிபிஎஸ்இ கொண்டுவந்த பிறகு படிப்படியாக கல்வித்தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது? மாணவர்களின் இடைநிற்றல், கற்கும் திறன், உயர்கல்வி சென்றோரின் சதகிவிதம், அரசு பள்ளி மாணவர்களின் நீட் மற்றும் நீட் அல்லாத பாடங்களின் சேர்க்கை விவரம் போன்றவற்றை வெளியிடத்தயாரா? என்பதை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்” எனக்கேட்டுள்ளார்.