கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை வந்திருந்த அன்புமணி ராமதாஸ் மணிக்கூண்டு திடலில் இருந்து அண்ணா சிலை கடைவீதி வழியாக உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றார். அப்பொழுது கல்வி, கலை, பொருளாதார, விவசாயம் ஆகியவற்றில் செலுத்தி இருக்க வேண்டிய தமிழ்நாடு இன்று குறைந்து காணப்படுவதாகவும் மது சாராயம், கஞ்சா போதைப்பொருள் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் விளக்கி பிரச்சாரம் மேற்கொண்ட பின்பு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பொதுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
மாவட்ட செயலாளர் செழியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜ் உட்பட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், 'கொடுங்கோல் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி கள்ளச்சாராய ஆட்சி நடத்தும் இந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளேன். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். குறிப்பாக திமுக ஆட்சி வரக்கூடாது என்பதுதான் முக்கியம். கள்ளச்சாராயம் என்றாலே கள்ளக்குறிச்சி தான் தமிழகத்திலேயே அதிகம் கள்ளச்சாராயம் விற்கும் மாவட்டமாக கள்ளக்குறிச்சி விளங்குகிறது. கடந்த ஆண்டு கள்ளசாராயம் குடித்த 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதற்கு திமுக அரசுதான் முழுப்பொறுப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஒரு எம்எல்ஏவும், விற்பவருக்கு ஒரு எம்எல்ஏவும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்த பொழுது அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் அவர் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்ததாக கூறியதால் தான் 67 பேர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முழுப் பொறுப்பு தமிழக அரசு தான். அதேபோல் தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் குட்கா, கஞ்சா போதைப்பொருள் என அனைத்து இடங்களிலும் தமிழ்நாட்டில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் கிடைக்கிறது. இந்தியாவிலேயே போதைப் பொருட்களை தடை செய்த ஒரே ஆள் நான் தான். அப்பொழுது 147 எம்பிகள் என்னை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் நான் தைரியமாக எனது கடமையை செய்தேன்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பந்தமான சிபிஐ விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சிக்குவார்கள் அவர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள். தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை காலையில் வழங்கினால் மாலையில் டாஸ்மாக் கடைக்கு அந்த பணம் சென்று விடும். தமிழகத்தில் நான்கு வயது குழந்தை முதல் எழுவது வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு யாரும் ஓட்டு போடக்கூடாது. திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது'' என கூறினார்.