'DMK rule will be re-established in Tamil Nadu' K. Veeramani's speech Photograph: (dk)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கில் சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சித்தார்த்தன், துணைச் செயலாளர் முருகன், பகுத்தறிவாளர் சங்க மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் கோபி.பெரியார்தாசன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக மாநில தலைவர் கி.வீரமணி, பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ம.சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ரப்பானி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் திக தலைவர் கி.வீரமணி பேசுகையில், ''தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகிறது. வாக்காளர்கள், வாக்காளர் பட்டியல்களில் தங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். தேர்தலுக்கு மட்டும் வாக்கு என்பது இருந்து விடாமல் உங்களுடைய குடியுரிமை உள்பட அனைத்திற்கும் இது பயன்பாடாக அமையும். ஆகவே வாக்காளர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. இது பெரியார் வாழ்ந்த மண். கடந்த எம்பி தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது 2026 தேர்தலிலும் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமையும்'' என்றார்.
கூட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகரச் செயலாளர் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மணவாளன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவில் நகர அமைப்பாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
Follow Us