தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் எழுந்து திமுக கூட்டணிக்குள் குழப்பம் நீடித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐபிடிஎஸ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டி தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிகாரப் பங்கீட்டிற்கு நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் கோரிக்கையை காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆமோதித்தனர்.
அதனை தொடர்ந்து, காங்கிரஸ் வாக்கு சதவீதத்தை நீக்கிவிட்டால் திமுக கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த உதவும், எனவே ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூறினார். ஆனால், இந்த விவகாரம் குறித்து திமுக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது. இதனால், திமுக கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து கூட்டணிக்குள் ஏற்பட்ட புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கேட்பது அவர் உரிமை. நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பது எப்போதும் கிடையாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது. தனிப்பட்ட கட்சியினுடைய ஆட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியெல்லாம் இருக்காது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/11/maniperiya-2026-01-11-15-54-02.jpg)