DMK NR Elango said SIR extension is a victory for DMK
திமுக சட்டத்துறைச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என். ஆர். இளங்கோ எம்.பி. இன்று (30-11-2025) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு ஒருவாரம் கால நீட்டிப்பு வழங்கியிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர், “தேர்தல் ஆணையம் 27/10/2025 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்திய எஸ்.ஐ.ஆர் நடைமுறையும், அதன் கால அளவீடுகளும் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். திமுக 2002 ஆம் ஆண்டிலிருந்தே இறந்துபோன வாக்காளர்கள், இரட்டைப் பதிவுள்ள வாக்காளர்கள் மற்றும் குடிமாறிச் சென்றவர்களை நீக்கி தூய்மையான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
எஸ்.ஐ.ஆர் நடைமுறையை நாங்கள் வரவேற்றாலும், இந்த வழிமுறைகள் சட்டத்திற்குப் புறம்பாக இருக்கின்றன. இவை பல வாக்காளர்களை நீக்குவதற்கும், தகுதியில்லாத வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் வழிவகுக்கும் என்ற அச்சம் எழுகிறது. மேலும் தகுதி இல்லாத வாக்காளர்களை சேர்ப்பதற்கான வழி காட்டுகிறது என்பதை எடுத்துச் சொன்னோம். அதில் முதலாவதாக காலக்கெடு என்பது மிக நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தோம். கழகத் தலைவர் அவருடைய வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. ஜனநாயக முறையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து அறப்போராட்டம் நடத்தினோம். இருந்தாலும் கூட களத்திலிருக்கும் எந்த ஒரு வாக்காளருடைய வாக்கும் நீக்கப்படக்கூடாது என்பதற்காக திமுகவினுடைய பிஎல்ஏக்கள் தீவிரமாக பணியாற்றினார்கள்.
ஒவ்வொரு நாளும் தேர்தல் ஆணையர் எவ்வளவு படிவங்களை வழங்கினோம் எவ்வளவு படிவங்களை கணினி மயமாக்கினோம் என்ற ஒரு கணக்கை தந்து கொண்டே வந்தார். ஏறக்குறைய 95 சதவீதத்திற்கு மேலான படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று சொன்ன தேர்தல் ஆணையம் ஏறக்குறைய 75லிருந்து 80 சதவீதம் வரை கணனிமயமாக்கப்பட்டிருக்கிறது என்றது. ஆனால், சென்னையில் 55 சதவீதம் மட்டும் தான் கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது. எத்தனை படிவங்கள் அல்லது எத்தனை சதவீத படிவங்கள் திரும்ப பெறப்பட்டன என்ற கணக்கை தேர்தல் ஆணையம் தரவே இல்லை. எவ்வளவு கொடுத்தோம் என்று சொல்கிறார்கள், எவ்வளவு கணனி மயப்படுத்தினோம் என்று சொல்கிறார்கள் எவ்வளவு திரும்ப பெற்றோம் என்பதை மட்டும் சொல்லவே இல்லை.
இதன் மூலம் பல வாக்காளர்களுடைய வாக்குகளை நீக்கிவிடும் அச்சம் இருக்கிறது. மேலும் பெறப்பட்ட படிவங்களை கணினி மயமாக்குவதில் மிகுந்த காலத்தாமதம் ஏற்படுதாக நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் மீண்டும் மீண்டும் இந்த கால அட்டவணை சரியானது அல்ல என்பதை வலியுறுத்தி வந்தோம். மேலும் பருவமழை காரணமாக இந்த பணிகள் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது என்பதையும் சுட்டி காட்டினோம். அதற்கு ஏற்றார் போல் தற்போது வந்திருக்கக்கூடிய புயலும் அந்த பணிகளை பாதிக்க கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் திமுகவினுடைய அந்த நியாயமான வாதத்தை ஏற்று ஒரு வார காலத்திற்கு இந்த கணக்கீட்டு காலத்தை நீட்டித்திருக்கிறது. அது உண்மையிலேயே திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அதனுடைய ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். எந்த ஒரு தமிழ்நாட்டு குடிமகனுடைய வாக்கும் விடுபடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த பயணத்தில் முதல் வெற்றியாக ஒரு வார காலத்திற்கு இதை தள்ளி வைத்திருப்பது கொடுக்கப்பட்ட அனைத்து படிவங்களை திரும்ப பெறுவதற்கும், அவற்றை கணினி மயமாக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். இருந்தாலும் கூட இந்த எஸ்ஐஆர் பணியில் பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
அவற்றை உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். பீகார் தேர்தலில் அல்லது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆரில் வாக்காளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது தெரிந்தெடுக்கப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர் அதை காட்டி தமிழ்நாட்டில் வாக்காளர் ஆகலாம் என்பதை 13வது ஆவணமாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ளக்கூடியது அல்ல. அதாவது அந்த வாக்காளர் பீகாரில் சாதாரணமாக வசிக்க கூடியவர் என்பதை ஜூலை மாதம் 2025 தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வாக்காளர் நவம்பர் மாதத்தில் பீகாரில் வாக்களித்துவிட்டு அதே நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நடத்தக்கூடிய எஸ்.ஐ.ஆரிலும் சாதாரணமாக வசிக்கக்கூடியவர் என்ற தகுதியை பெறுவார் என்பது எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இல்லை. இது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை எடுத்துச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் 4 ஆம் தேதி எங்களுடைய வாதத்தை எடுத்து வைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Follow Us