தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் நாடளவில் வாக்காளர் சிறப்புப் பட்டியல் திருத்தம் மற்றும் அதில் உள்ள குளறுபடிகள் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்தியத் தேர்தல் ஆணையம் அவரது குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இந்தநிலையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில் அது குறித்து முக்கியமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வாக்காளர் திருத்த பணிகளில் குளறுபடிகள் ஏற்படாமல் கண்காணிப்பது மற்றும் இது தொடர்பான விஷயங்களில் திமுக எம்பிகளின் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வர இருக்கிற சூழலில் அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.