தமிழர்களின் வீடுகளில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மொய் என்பது காலந்தொட்டு வந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தில் ஒன்று. ஒரு வீட்டில் நடக்கும் விழாக்கள், எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளில் அந்த வீட்டாரின் பணச்சுமையில் உறவுகள் சிறிதளவு பங்கெடுக்கும் விதமாக இந்த மொய் செய்வதை தமிழர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த 1980 காலகட்டத்தில் வீட்டில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் தனியாக ஆட்டு கறி விருந்து கொடுத்து 'மொய் விருந்து' நடத்த தொடங்கினர். முதலில் பல ஆயிரங்களில் தொடங்கிய் வசூல் பிறகு கோடிகளில் குவியத் தொடங்கியது.  இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த மொய் விருந்து கலாச்சாரம் பரவியது. இதனால் குழந்தைகளின் படிப்பு உட்பட ஏராளமான நன்மைகள் இருந்தாலும் பலர் கடனாளிகளாகி சொத்துக்களையும் உயிர்களையும் கூட இழந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

நல்ல முறையில் நடந்து பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரமாக இருந்த மொய் விருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.500 முதல் ரூ.700 கோடிகள் வரை பணப் புழக்கத்தில் வந்தது. இதனால் பல தொழில்களும் வளர்ச்சியடைந்தது. இந்த மொய் விருந்துகள் களை கட்டி இருந்தபோது கஜா புயலும், கொரோனாவும் அப்படியே புரட்டிப் போட்டது. இதனால் தொழில்களில் முடக்கம், விவசாயத்தில் வருமானம் இன்மை போன்ற காரணங்களால் மொய்விருந்துகளும் முடங்கத் தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் முடங்கி 30% மொய் விருந்துகளே நடக்கிறது. ஆனால் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் இன்றும் ஓரளவு நீடிக்கிறது.

இந்தநிலையில் பேராவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கடந்த 2022 ம் ஆண்டு ஒரு டன் ஆட்டுக்கறி விருந்து கொடுத்து மொய் விருந்து நடத்தி ரூ.10 கோடிகள் வரை மொய் வாங்கினார். அந்த தொகையை அப்போதே தான் வாங்கிய கடன்களுக்கு திருப்பிக் கொடுத்தார். மூன்று ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் மீண்டும் 5 ந் தேதி வெள்ளிக்கிழமை 'போட்ட மொய் மட்டும் வாங்கப்படும்' என்று பத்திரிக்கைகள் அச்சடித்து தான் மொய் செய்தவர்களுக்கு மட்டும் கொடுத்து 450 கிலோ ஆட்டு கறி சமைத்து விருந்து கொடுத்து நடத்திய மொய் விருந்தில் ரூ.1.80 கோடிகள் மட்டும் மொய்யாக கிடைத்துள்ளது.

Advertisment

3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 கோடி வாங்கிய எம்எல்ஏ இப்ப ரூ.1.80 கோடி தான் வாங்கி இருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.ஆனால், எம்எல்ஏ போட்ட மொய் வாங்கத் தான் 3 ஆண்டில் மொய் விருந்து நடத்தினார். அதனால் இவர் செய்த மொய் பணத்தை மட்டும் திருப்பி செய்திருக்கிறார்கள். புதுநடை மொய் யாரும் செய்யவில்லை. அதனால் தான் குறைவான தொகை வந்துள்ளது. இன்னும் சிலர் மொய் செய்ய வேண்டி இருக்கும் அதை வீட்டில் வந்து எழுதுவார்கள் என்றனர்.