“ஏழைகளின் வாழ்வு மேம்பட, மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகக் கொண்டு தமிழ்நாட்டில் அமையப்பெற்ற திமுக அரசாங்கத்தால், எத்தனையோ நலத்திட்டங்கள் எளிய மக்களையும் சென்றடைகின்றன. அந்த வகையில் நானும் ஒரு திமுக எம்.எல்.ஏ. என்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று பேசும்போதெல்லாம் குறிப்பிடத் தவறுவதில்லை, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன்.
‘இனிக்க இனிக்கப் பேசும் மக்கள் பிரதிநிதிகள் அதனைச் செயலில் காட்டுவதில்லை’ என்ற பொதுவான விமர்சனத்தைக் கடந்தவராக தங்கப்பாண்டியன் இருக்கிறார். எப்படியென்றால், தனது எம்.எல்.ஏ. மாத ஊதியத்தை பொதுக் காரியங்களுக்கு மட்டுமே செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 2022-23ல் உலக வங்கியின் தரவுத்தளத்தின்படி இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் 5.25 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் 2.2 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வாழ்க்கையின் இருளை அகற்றி ஒளி கொடுக்கும் நாளாக தமிழ்நாட்டிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்படுகிறது தீபாவளி. அந்நாளில் புத்தாடை அணிவது ஒரு புதிய தொடக்கத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. வறுமை ஒழிப்புக்காக தொடர்ந்து எத்தனையோ திட்டங்களை தமிழ்நாடு அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. “வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு
உள்ளது. இதுதான் கம்பன் கண்ட கனவு. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணியில் தமிழ்நாடு உள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாலும், தீபாவளிக்கு புத்தாடை வாங்கமுடியாத ஏழைகளும் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.
‘நாடு முழுவதும் புத்தாடை உடுத்தி தீபாவளியைக் கொண்டாடும்போது, அதனை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்த ஆதரவற்றோரின் மனநிலை எப்படியிருக்கும்?’ என்ற மனிதநேயச் சிந்தனைதான், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை ஆதரவற்ற குழந்தைகளின் மீது அக்கறைகொள்ள வைத்துள்ளது. தற்போது 9-வது முறையாக, தனது 5 மாத ஊதியத்திலிருந்து (ரூ.5,25,000) ராஜபாளையம் தொகுதியில் மூன்று காப்பகங்களில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கியிருக்கிறார். இந்நிகழ்வில் தங்களுக்குப் பிடித்தமான உடையை, அந்தக் குழந்தைகளே பார்த்துப் பார்த்து தேர்வு செய்துள்ளனர்.
தீபாவளி மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 8 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஆதரவற்ற குழந்தைச் செல்வங்களை மகிழ்விக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளதாக அவர்களிடம் பகிர்ந்துகொண்ட தங்கப்பாண்டியன், “உங்களது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது. கல்வியைச் சிறப்பானதாகவும், தரமானதாகவும் வழங்குவதற்கு, ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காக்கும் அன்புக்கரங்கள் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அனைத்துத் திட்டங்களையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.