தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாம்களைச் சென்னையில் நேற்று (02.08.2025) தொடங்கி வைத்தார். அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதாவது ஆண்டிப்பட்டி அருகே உள்ள தக்கம்பட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. 

அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக வரவேற்பு பேனரை பார்த்த தங்க தமிழ்செல்வன் கோபமாகச் சென்று மேடையில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் புரோட்டோகால் படி நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் ஏன் வரவேற்பு பேனரில் வைக்கப்படவில்லை எனக் கோபமாகக் கேட்டுள்ளார். 

இதையடுத்து மேடையில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  நலத்திட்ட உதவி வழங்கும்போது அந்த நலத்திட்ட உதவி அட்டையை  நான்தான் வழங்குவேன் எனத் தங்க தமிழ்செல்வன் கையில் கொடுக்காமல் அதனைப் பிடுங்கி மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி முன்னதாகவே முடிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ மகாராஜனைக் கண்டித்து ஆண்டிப்பட்டி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘கண்டிக்கின்றோம்’ என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “ஓய்வின்றி உழைக்கும் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் ஆணைக்கிணங்க நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத் துவக்க விழாவில் கலந்து கொண்ட, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டிபட்டி மக்களுக்கு அயராது உழைத்திட்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனை, ஒருமையில் பேசியும் அவரை அவமதித்தும் மேடையில் தவறாக நடந்து கொண்ட ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம்.எல்.ஏ.வை வன்மையாக கண்டிப்பதோடும், தங்க தமிழ்செல்வனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாய் கேட்டுக்கொள்வதோடும் தொடர்ந்து கட்சியையும், பொது மக்களையும் மதிக்காத எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்... இவண் : கழக உடன்பிறப்புகள் ஆண்டிபட்டி கிழக்கு மேற்கு மற்றும் பேரூர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.