Advertisment

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர்; “வாகனத்தில் கர்ப்பிணிப் பெண் இருந்துள்ளார்” - திமுக எம்.எல்.ஏ!

ambu

DMK MLA says There was a pregnant woman in the vehicle at AIADMK members hit ambulance driver

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

அதன்படி, கடந்த 18ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்த போது அங்குள்ள கூட்டத்தினர் மத்தியில் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைய முயன்றது. அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி, “ஆம்புலன்ஸில் ஆள் இருக்காங்களா, இல்லையா? ஒவ்வொரு முறையும்  இப்படித்தான் நடக்குது. நிறுத்திப் பாருங்கள். அடுத்த முறை வெறும் ஆம்புலன்ஸ் வண்டி வந்தால், அதனை யார் ஓட்டிக்கிட்டு வருகிறார்களோ, அவரே பேஷண்ட்டாக மாறி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும் விடும்” எனப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும், எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள மணச்சநல்லூரில் எடப்பாடி பழனிசாமி நேற்று (24-08-25) பரப்புரை மேற்கொண்டார். மணச்சநல்லூரில் பரப்புரையை முடித்து கொண்டு துறையூருக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து கொண்டிருந்தார். துறையூரில் பாலக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர். அப்போது ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாக சென்றது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்யும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவது வாடிக்கையாகவும், தொடர்கதையாக உள்ளது என அதிமுக தொண்டர்கள் கூறி 108 ஆம்புலன்ஸை சுற்றி சூழ்ந்துகொண்டு ஓட்டுநரைத் தாக்கியும், ஆம்புலன்ஸை கைகளால் தட்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் நிலைகுலைந்து போன ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செய்வதறியாது திகைத்து நின்றார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து திமுக எம்.எல்.ஏ எழிலன் இன்று (25-08-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “அதிமுக கூட்டத்தில் ஒருவர் மயக்கமடைந்திருப்பதாக விஷ்வா என்ற தொலைப்பேசி எண்ணில் இருந்து ஒரு பெண் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன்படி அருகில் உள்ள துறையூர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு எமர்ஜென்ஸி ஓட்டுநரும் மற்றும் எமர்ஜென்ஸி டெக்னிசியன் ஹேமலதா ஆகியோர் அங்கு விரைந்திருக்கிறார்கள். அங்கு போகும் போது பொதுக்கூட்டம் ஆரம்பிக்கவில்லை, பேரணி எதுவும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அந்த ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ஓட்டுநரின் சட்டையை இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பின்னாடி இருந்த எமர்ஜென்ஸி டெக்னிசியன் ஹேமலதா அணிந்திருந்த பேட்ஜ், ஓவர் கோட் ஆகியவற்றை பிடிங்கியிருக்கிறார்கள். ஹேமலதா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த மாதம் மகப்பேறு விடுப்பு எடுப்பதாக இருந்திருக்கிறார். பிரசவ நேரத்திலும் மக்களுக்கு சேவை செய்வதற்காக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Advertisment

இந்த சம்பவம் முடிந்த பிறகு யார் மயக்கமடைந்தார் என்பது குறித்து விசாரிக்கும் போது விஷ்வா என்ற நபரை தொடர்பு கொண்டோம். கூட்டத்தில் ஒருவர் மயக்கமடைந்ததாலும், தனக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும் அருகில் உள்ள பெண் மூலம் இந்த விஷயத்தை ஆம்புலன்ஸுக்கு சொன்னோம் என்று விஷ்வா கூறினார். 1 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அந்த நபர் அவரது குடும்பம் மூலமாக மருத்துவமனைக்கு சென்றதாகவும் விஷ்வா கூறினார். மயக்கமடைந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டிருந்தாலோ, ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அந்த உயிருக்கு யார் பொறுப்பு ஏற்று கொள்வது?. பிரதான கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் ஒரு நபர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. எடப்பாடி பழனிசாமி அன்றைக்கு அப்படி பேசாமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. அவர் பொறுப்பின்றி பேசியதால் தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டனர். இது தவறான முன்னுதாரணமாக ஆகக் கூடாது. மருத்துவத்துறையின் சேவையை, ஒரு எதிர்க்கட்சி பொறுப்பில் இருப்பவர் இது போன்ற பேசியது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது” என்று தெரிவித்துள்ளார்.

108 ambulance admk Ambulance ezhilan trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe