பாமகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக, ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே "நீயா நானா" போட்டி நிலவி வருகிறது. அதன் காரணமாக அவரது ஆதரவாளர்களை இவர் கட்சியில் இருந்து நீக்குவதும், இவரது ஆதரவாளர்களை அவர் நீக்குவதும் வழக்கமாகியிருக்கிறது. இதனிடையே, அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான், "தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்" என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஜூலை 3 அன்று வேலூரில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த அன்புமணி, அன்று இரவு நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "இந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் இருக்கிறார். அவர் இந்த மாவட்டத்திற்காக பாலாற்றில் ஒரே ஒரு தடுப்பணையாவது கட்டியிருக்கலாம். அப்படி கட்டியிருந்தால், மாவட்டம் வளர்ச்சியடைந்திருக்கும்," என்றார். அன்புமணியின் இந்தப் பேச்சு வேலூர் திமுகவினரை ஆத்திரமடையச் செய்தது.
இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் பேசிய, வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார், "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் தரைகீழ் தடுப்பணை உட்பட 9-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியுள்ளோம். தற்போதும் பல அணைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில அணைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. பல தடுப்பணைகளை பாலாற்றில் கட்டியுள்ளோம். இவை தெரியாமல், யாரோ எழுதிக்கொடுத்ததை அன்புமணி பொதுவாகப் பேசிவிட்டார்.
நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சர்; பொதுவாகப் பேசக்கூடாது. ஒட்டுக்கேட்பதில் மட்டும் கவனம் செலுத்தும் நீங்கள், திமுக ஆட்சியின் சாதனைகளைத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் வந்தால், பாலாற்றில் கட்டிய தடுப்பணைகளை அழைத்துச் சென்று காட்டத் தயாராக இருக்கிறோம். தயவுசெய்து திரித்துப் பேச வேண்டாம். வேலூர் மாவட்ட மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்.
அன்புமணி அவர்களே, ஒட்டுக்கேட்பதை உங்கள் தந்தையுடன் வைத்துக்கொள்ளுங்கள். வேலூரில் உங்கள் நடைப்பயணம் முடிவதற்குள், நாளை காலை வாருங்கள்; நானும் வருகிறேன். நாங்கள் கட்டிய அணைகளைக் காட்டத் தயார்; நீங்கள் வரத் தயாரா?" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார். இது தற்போது பாமக மற்றும் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.