கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, உயர் மருத்துவ சேவைகள் வழங்க 12.78 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை செயல்படுத்தும் விதமாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் இலவச மருத்துவ முகாம்களை தமிழக அரசு இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அது தொடர்பான விவரங்கள், பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங், பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணன் கலந்து கொண்டனர். அப்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சென்றார்.
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், “என்னுடைய தொகுதியில் நான் தான் நலத்திட்ட உதவிகள் வழங்குவேன்...” என்று நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு பிடுங்கியிருக்கிறார். இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மேடையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருவரும் மாறிமாறி ஒருமையில் பேசிக்கொண்டனர். பின்பு அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து விழாவை முடித்து வைத்தனர்.
அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் மேடையிலேயே முட்டிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.