தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், திமுக - தவெக இடையே சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, விஜய்யின் ரசிகர்களான தவெக தொண்டர்கள் அரசியல் மயப்படவில்லை அதனால் அவர்கள் தற்குறிகள் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜய் ரசிகர்களை தற்குறிகள் என விமர்சிக்க வேண்டாம் என திமுக எம்.எல்.ஏ எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக கட்சி ஆரம்பித்து 75வது ஆண்டு நிறைவைடைந்ததையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘திமுக 75 - அறிவுத்திருவிழா’ என்ற நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ எழிலன் பேசிய போது, “ஒரே ஒரு அறிவுரை கூறுகிறேன். தற்குறிகள், தற்குறிகள் என சொல்லி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின இளைஞர்களை நாம் விமர்சனம் செய்துக் கொண்டிருக்கிறோம். இது தவறான அணுகுமுறை. நாம் அவர்களிடம் பேசவில்லை, அவர்களிடம் பேசாமல் போனது நம்முடைய தவறு. நம்முடைய கல்லூரி ஆசிரியர்களும், பள்ளி ஆசிரியர்களும் அவர்களுக்கு சமூகநீதி அரசியலை அவர்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை. நாம் பேசவில்லை, ஏனென்றால் அவர்களுடைய மொழி நமக்கு தெரியவில்லை.
நாம் உரையாட ஆரம்பித்தால் அவர்களை நம்ப வைக்கலாம். அந்த தலைமைகள் ஒரு சுயநல போக்கோடு போகிறார்கள். ஆனால், அங்கே இருக்கிற பசங்க ரசிகர் கூட்டம் தான். அந்த ரசிகர் கூட்டத்திடம் உரையாட தொடங்க வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது. நாமே அவர்கள் மீது ஒரு வெறுப்புணர்ச்சியை வைக்கிறீர்கள். அவர்கள் சங்கிகள் கிடையாது. அதனால் அவர்களுடன் பேச தொடங்க வேண்டும். இங்குள்ள இளம் பேச்சாளர்களுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டும். அவர்களை இயங்க வையுங்கள், அடிபடுவான், அப்போது உண்மை நிலவரம் புரியும். வறுமை புரியும், போலியான தலைவர்களைப் பற்றி உணர்வான். அவர்களை கைப்பற்றுங்கள், அவர்கள் நம்ம பசங்க. சோசியல் மீடியாவில் தற்குறிகள், தற்குறிகள் என அவமானப்படுத்தாதீர்கள். அவர்களை கோபப்படுத்தாதீங்க. சங்கிகளின் சதி வேலை அது. நம்ம பக்கம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் வரக்கூடாது என்ற சங்கிகளின் சதி வேலை அது. அந்த சதி வேலையை உணருங்கள், அது தான் பகுத்தறியும் தன்மை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/12/vijayezhilan-2025-11-12-18-33-42.jpg)