Advertisment

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை; திமுக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கைது!

Untitled-1

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்  20 வயது மாற்றுத்திறனாளி இளைஞர். பட்டப்படிப்பை முடித்து இந்த இளைஞர், அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகுவதற்காக கிருஷ்ணகிரி பழையபேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி நூலகத்திற்கு தினசரி சென்று படித்து வருவதை  வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஆக்ஸ்ட் 27 ஆம் தேதி மாலை நூலகத்தில் இருந்து வெளியே வந்த இளைஞர், வீட்டிற்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணொருவர், அவரிடம், “தனிமையில் இருக்கலாம்...” என்று ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisment

பின்னர், இருவரும் லாட்ஜியில் தனிமையில் இருந்த நிலையில், இளைஞர் அந்தப் பெண்ணுக்கு 300 ரூபாய் கொடுத்துவிட்டு பேருந்து நிலையத்திற்குத் திரும்பியிருக்கிறார். அப்போது அங்கு வந்த பழையபேட்டையில் பேன்சி கடை வைத்துள்ள நகராட்சி கவுன்சிலர் முகமது அலி என்பவரின் தம்பி அசேன் அலிகான், அந்த இளைஞரிடம், “நீ அந்தப் பெண்ணோடு பேசியது, இருவரும் லாட்ஜில் தனிமையில் இருந்தது என அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளேன். ஏற்கனவே அதனை போலீஸுக்கும் அனுப்பி வைத்துவிட்டேன்” என்று மிரட்டியிருக்கிறார். மேலும், இளைஞரின் செல்போன் எண்ணை வாங்கிகொண்டு, “நாளைக்கு போன் செய்கிறேன்” என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் அந்த இளைஞருக்கு போன் செய்த அசேன் அலிகான், மாலை 3 மணிக்கு புது பஸ் ஸ்டாண்டுக்கு வா...” என்று அழைத்திருக்கிறார்.

அந்த இளைஞரும் மாலையில் புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்றுள்ளார். பைக்கில் அங்கு வந்த அசேன் அலிகான், இளைஞரை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தர்கா பின்புறம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், “எஸ்.பி.யின் கீழ் உள்ள ஒரு அதிகாரி ஒருவர் வருவார், அவர் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும், மறுத்தால் உன்னை அடித்து விடுவார்..” என அசேன் அலி மிரட்டியிருக்கிறார்.

அப்போது அங்குவந்த பர்கூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வு மதியழகனின் உதவியாளர் அதியமான், “இங்கு வேண்டாம்...” எனக் கூற, உடனே அசேன் அலிகான், அந்த இளைஞரை அழைத்துக்கொண்டு மூவரும் குந்தாரப்பள்ளி வார சந்தை பகுதி அருகே உள்ள புதர் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து மாற்றுத்திறனாளி இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து, அவரை பாலியல் தொந்தரவு செய்ததாகச் சொல்லப்படுகிறது. முதலில் அசேன் அலியும், அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏவின் உதவியாளரான அதியமானும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து  வற்புறுத்தி மாற்றுத்திறனாளி இளைஞரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

பின்னர் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை அசேன் அலி பைக்கில் அழைத்துச் சென்று புது பஸ் ஸ்டாண்டில் விட்டுள்ளார். மேலும், “இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம்..” என்று மிரட்டியும் இருக்கிறார். அதன்பின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் இரவு முழுவதும் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். காலை கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. அலுவகலம் சென்ற நடந்ததை கூறி புகார் மனு அளித்துள்ளார். அதன்பிறகு அந்த புகார் டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் காட்டச் சொன்னதை அடுத்து, பழையபேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பேன்சி கடைக்கு சென்று அங்கிருந்த அசேன் அலி கானை இளைஞர் அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், மாற்றுத்திறனாளி இளைஞர் பெண்ணிடம் பேசிய வீடியோவை எம்.எல்.ஏவின் உதவியாளர் அதியமானுக்கு அனுப்பியதும், அதியமான் அந்த இளைஞரை தனியாக அழைத்து வரச் சொன்னதும் உண்மை என அசேன் அலி ஒப்புக்கொண்டிருக்கிறார்.  எம்.எல்.ஏவின் உதவியாளர் பெயர் அடிபட்ட உடனே போலீசார் மாற்றுத்திறனாளி இளைஞரிடம் நடந்தது குறித்து யாரிடமும் வெளியே சொல்லக் கூடாது என அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 2ஆம் தேதி மீண்டும் டவுன் காவல் நிலையத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளி இளைஞர் எஃப்.ஐ.ஆர். நகலை கேட்டுள்ளார்.

அதற்கு இந்தச் சம்பவத்திற்கு சாட்சி யாரேனும் இருக்கிறார்களா? என போலீசார் கேட்க, தனது அண்ணன் ஒருவருக்கு தெரியும் என அந்த இளைஞர் கூறியுள்ளார். உடனே அண்ணனின் மொபைல் எண்ணை வாங்கிய போலீசார் அந்த எண்ணை எம்.எல்.ஏவின் உதவியாளர் அதியமானின் குரூப்பிற்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அதியமான் தரப்பினர் மாற்றுத்திறனாளி இளைஞரின் அண்ணனுக்கு போன் செய்து இருவரையும் டான்சி வளாகத்தில் உள்ள தாபாவிற்கு வரவழைத்து கட்டப் பஞ்சாயத்து செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அங்கிருந்த கிருஷ்ணகிரி மாவட்ட மேற்கு நகர செயலாளர் அஸ்லாம், “தம்பி எல்லாம் பேசியாச்சு, இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும், நான் சொல்வது போல எழுதிக் கொடுத்துவிடு..” என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞரும் புகார் அளித்த டவுன் காவல் நிலையத்திற்கு சென்று எழுதிக் கொடுத்து கேஸை வாபஸ் வாங்கியுள்ளார். கேஸ் வாபஸ் வாங்கிய பின்னர் மீண்டும் மாற்றுத்திறனாளி இளைஞரை அதே தாபாவிற்கு அழைத்துச் சென்று, அவரின் பாக்கெட்டில் மேற்கு நகர செயலாளர் அஸ்லாம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துள்ளார். அதனை இளைஞர் வாங்க மறுத்த போதிலும் பணத்தை வலுக்கட்டாயமாக வைத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் 7 ஆம் தேதி அன்று உயிரை மாய்த்துகொள்வதற்காக சையது பாஷா மலைக்கு சென்றுள்ளார் அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இளைஞரை மீட்டு, அந்த இளைஞரின் ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு தகவல் கொடுத்து, கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சேவை சங்க செயலாளர் மணி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று, எஸ்.பி. தங்கதுரையிடம், கவுன்சிலரின் தம்பி அசேன் அலி, எம்.எல்.ஏ. உதவியாளர் அதியமான் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்த திமுக நகர செயலாளர் அஸ்லாம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். மனு அளித்த ஒரு சில மணி நேரங்களிலேயே எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. முரளி, இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் தலைமையில் கவுன்சிலரின் தம்பி அசேன் அலி மற்றும் எம்.எல்.ஏ. உதவியாளர் அதியமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கட்டப் பஞ்சாயத்து செய்த திமுக நகர செயலாளர் அஸ்லாம் மற்றும் உடன் இருந்த சுகுமார், கிரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என அதிமுக கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் நகர செயலாளர் கேசவன் உள்ளிட்டோர் தலைமையில் 8ஆம் தேதி இரவு 9:30 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி. சங்கர், டிஎஸ்பி முரளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி திமுக நகர செயலாளர் அஸ்லாம்  உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து போராட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.கைதான அசேன் அலி மற்றும் எம்.எல்.ஏ. உதவியாளர் அதியமான் ஆகியோரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்துள்ளனர். இதில் எம்.எல்.ஏ. உதவியாளர் அதியமான் இதற்கு முன்பு ஊர் காவல் படையில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள திமுக நகர செயலாளர் அஸ்லாம் மற்றும் சுகுமார், கிரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதற்கிடையில் அதிமுகவினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது திமுக மேற்கு நகர செயலாளர் அஸ்லாம் குடிபோதையில் நிர்வாகி ஒருவரிடம் அதிமுக எம்எல்ஏ அசோக்குமாரை ஆபாசமாகப் பேசுவதும், தமிழக முதலமைச்சரிடமே சொன்னாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனப் பேசும் ஆடியோ ஒன்றும் வைரலாகியது. இதையடுத்து அதிமுகவினர், திமுக நகர செயலாளர் கைது செய்யக் கோரி போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி இளைஞரை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதற்காக, திமுக கவுன்சிலரின் தம்பி மற்றும் திமுக எம்.எல்.ஏவின் உதவியாளர் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MLA Krishnagiri dmk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe