புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவரங்குடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய 51வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (25.08.2025 - திங்கட்கிழமை) சிறப்பு விருந்தினராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கலந்து கொண்டு கடந்த 2 நாட்களாக வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மகன் சூரியா ராஜா பாலு கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார். அவருக்கும் பாஜக மாஜி தலைவர் பதக்கங்களை அணிவிக்க முயன்றார். அப்போது சூரியா ராஜா பாலு அந்தப் பதக்கங்களை கழுத்தில் போடவிடாமல் தடுத்து தனது கையில் வாங்கிக் கொண்டு படம் எடுத்துக் கொண்டார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரம் கல்லூரி மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தார். இன்று விளையாட்டு வீரர் பாஜக மாஜி தலைவரிடம் பதக்கம் பெற மறுத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.