2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிகள், தொகுதி பங்கீடுகள் என அரசியல் கட்சி தலைவர்கள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் வழக்கம் போல திமுக - காங்கிரஸ் மோதல் உச்சநிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இன்று நடந்த ஒரு சம்பவ வீடியோவால் மேலும் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் உள்ளனர்.

Advertisment

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி, கடந்த 2 முறையாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் வேவட்பாளரானார். அவர், 2016 தேர்தலில் தோற்றாலும் 2021 தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு, ஆளும் திமுக கட்சி நிர்வாகிகள் இல்லாமலேயே அரசு நிகழ்ச்சிகள் நடத்துவதாக தொடர்ந்து திமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில் அமைச்சர்களையே அழைக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு போட்டு வைத்திருக்கிறார். இதனால் திமுகவினர் பகைமையை காட்டத் தொடங்கினர். இதனால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் சின்னமே போட்டியிட வேண்டும், வேறு சின்னங்களுக்கு வாக்களிக்க திமுகவினர் தயாராக இல்லை என்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் மாஜி உதயம் சண்முகம் வெளிப்படையாக பேசினார்.

Advertisment

திமுக தொகுதி நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் மண்டலப் பொறுப்பாளர் அமைச்சர் நேருவிடமும், தொகுதி திமுக நிர்வாகிகள் கராராக கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஆவுடையார்கோயில் தீயணைப்பு நிலையம் கட்டட பூமிபூஜை போட்ட நிகழ்விற்கு தன்னை அழைக்கவில்லை என்று ஒன்றிய செயலாளரான மாஜி உதயம் சண்முகம் நேரில் போய் பிரச்சனை செய்தார் என்ற கானொளி வெளியாகி பரபரப்பானது. இப்படி ஆளும் கட்சி நிர்வாகிகளை அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், அறந்தாங்கி ஒன்றியம் ஆளப்பிறந்தான் ஊராட்சி கருவிடைச்சேரி கிராமத்தில் சாலை மராமத்துப் பணிக்கு இன்று (05-02-26) சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் பூமிபூஜை நடந்தது. இதில் ராமச்சந்திரனுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் வழக்கம் போல திமுகவினருக்கு அழைப்பு இல்லாததால் யாரும் கலந்து கொள்ளவில்லை. அப்போது அங்கு சென்ற ஒரு திமுக மாணவரணி அறந்தாங்கி தெற்கு ஒன்றிய நிர்வாகி ராஜா என்பவர், ‘இது எங்க அமைச்சர் பரிந்துரையில் வந்த சாலைப் பணி ஆனால் எங்க கட்சிக்காரங்களுக்கோ, எங்க ஒன்றியச் செயலாளருக்கோ சொல்லவில்லை. அழைப்பு இல்லை. சட்டமன்ற உறுப்பினரான நீங்க வருவதை நாங்க ஏதும் சொல்லவில்லை. ஆனால் எங்க கட்சிக்காரங்களுக்கு சொல்லாம நிகழ்ச்சி நடக்குது’ என்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதம் செய்தார்.

Advertisment

அப்போது சட்டமன்ற உறுப்பினருடன் வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், திமுக ஒன்றிய செயலாளரை ஒருமையில் பேசி நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்று கூறும் கானொளி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு தயாராக உள்ள நிலையில் அறந்தாங்கி தொகுதியில் கூட்டணி மோதல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.