தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டில் மக்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. தனது பயணத்தின் போது திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாகத் தாக்கி பேசி வருகிறார்.
அந்த வகையில் செங்கல்பட்டில் பேசிய இ.பி.எஸ். "10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஏராளமான கல்லூரிகளைத் திறந்து குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். திமுக ஆட்சியில் ஒரு மெடிக்கல் காலேஜ் திறக்க முடிந்ததா? ஒன்றுமே இல்லை.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்தி விட்டனர். அப்போதும் மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாததுக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கும் இந்த அரசு தொடர வேண்டுமா?
உள்ளாட்சித் துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளைப் பெற்றோம். போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வி இப்படி பல துறைகளிலும் விருதுகளைப் பெற்றோம். அதுமட்டுமில்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றோம். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்ற அரசாங்கம் அதிமுக அரசு
கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஊழல் செய்த கட்சி திமுக. 2 ஜி ஸ்பெக்ட்ரமில் கொள்ளையடித்த கட்சி திமுக. தலை நிமிர்ந்து இருந்த தமிழனை டெல்லியில் தலை குனியவைத்த கட்சி திமுக " என்று மிக கடுமையாக தாக்கி பேசினார் இ.பி.எஸ். அவரது சுற்றுப்பயணத்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நோட் பண்ணி உடனுக்குடன் மேலிடத்துக்கு அனுப்பி வருகிறது உளவுத்துறை.